நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கலைஞர் குடும்பத்துக் கதாசிரியர்!

தனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதை, கேரக்டரின் முக்கியத்துவம் கருதி எத்தனை பேருடனும் நடிக்கத் தயாராக உள்ளார் பிரசன்னா. சாக்லேட் ஹீரோவாக நடித்து வந்த நேரத்தில் "அஞ்சாதே' படத்தில் வில்ல

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:04 pm

மனோஜ் கிருஷ்ணா

தனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதை, கேரக்டரின் முக்கியத்துவம் கருதி எத்தனை பேருடனும் நடிக்கத் தயாராக உள்ளார் பிரசன்னா. சாக்லேட் ஹீரோவாக நடித்து வந்த நேரத்தில் "அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது சிபிராஜுடன் "நாணயம்', முரளியின் மகன் அதர்வாவுடன் "பாணா' படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து சேரனுடன் "முரண்' என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோக்களுள் ஒருவராகத் திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் ஒரு குறும்படத்திலும் நடித்துள்ளார். எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய இந்தக் குறும்படத்தைத் துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ளார். இதையடுத்து உதயநிதிக்காக இரண்டு சினிமா கதைகளையும் தயார் செய்திருக்கிறார் கிருத்திகா.

இது சுள்ளுனு ஒரு காதல்!

சூர்யா-ஜோதிகா நடித்த "சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் புதிய படம் "ஏன் இப்படி மயக்கினாய்'. பிரமிடு சாய்மீரா நிறுவனத்துக்காக மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ரிஷி, வேதா, வைணவி போன்ற புதுமுகங்களுடன் லட்சுமண் ராமலிங்கா என்ற இசையமைப்பாளரும் இதில் அறிமுகமாகிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...

""ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின்கள் இருப்பதால் இது முக்கோணக் காதல் கதையல்ல. ஆனால் மூவரையும் சுற்றி நடக்கும் வித்தியாசமான கதை. சட்டமும் இந்தச் சமூகமும் பெண்களுக்கே சாதகமாக இருக்கின்றன. இதற்கு எப்போதோ யாரோ ஓர் ஆண் செய்த தவறு காரணமாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் தவறாகக் கருதலாமா என்ற கேள்வியை எழுப்பும் படமாக இருக்கும். படத்தின் அனைத்துக் காட்சிகளையும் அவுட்டோரிலேயே எடுத்திருக்கிறோம். பாடல்களும் பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்படும்'' என்றார். சில்லுனு ஒரு காதல் போல இது சுள்ளுனு ஒரு காதலாக இருக்கும்.

களம் இறங்கும் ராமநாதபுரம்!

விஜயகாந்த் நடித்த "சுதேசி' படத்தை இயக்கிய ஜேப்பி அழகர் இயக்கும் புதிய படம் "வானம் பார்த்த சீமையிலே'. அசோக், பிரியங்கா, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடைபெறுகிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""இந்தப் படத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்ட வட்டார வழக்கைப் பயன்படுத்தியிருக்கிறோம். சினிமாவுக்காக கதை பண்ணுவதில் ஒரு ஃபார்முலா கையாளப்படுகிறது. அதற்குள் அடங்காத ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் வித்தியாசமான திரைக்கதையைப் பயன்படுத்தியிருக்கிறோம். படத்தில் கருப்பண்ணசாமி கோயிலும் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. காரைக்குடியைச் சுற்றியுள்ள வறட்சியான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கிராமிய மணம் கமழும். கிராமத்து மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலித்த "16 வயதினிலே', "கிழக்கு சீமையிலே', "பருத்தி வீரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களின் பட்டியலில் இந்தப் படமும் இடம்பெறும்'' என்றார்.

டிபார்ட்மென்ட்டுக்குப் பெருமை!

போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாததால் நன்கு சம்பாதித்து ஒரு படத்தைத் தயாரித்து, அதில் போலீஸ் அதிகாரியாக நடித்து தன்னுடைய நிஜ கனவை நிழல் சினிமாவில் நிறைவேற்றியுள்ளார் மதுரையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். என்ற எஸ்.ஆர்.முகேஸ்.

புதுமுகம் விஜய் ஆனந்த், மிதுனா, சீதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சீத்தாபதி. துணை முதல்வர் ஸ்டாலின் நடித்த "ஒரே ரத்தம்' படத்தில் அவருடைய நண்பராக நடித்து அந்தப் படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றியவர் இவர். படத்தைப் பற்றி கேட்டபோது...

""விரும்பிப்போனால் விலகிப்போகும் விலகிப்போனால் விரும்பி வரும்... அதுதான் காதல். இதை ஒரு போலீஸ் கதையின் பின்னணியில் வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருக்கிறோம். போலீஸ் என்கவுண்ட்டர் கதைகளில் இந்தப் படம் குறிப்பிடத் தகுந்த கவனத்தைப் பெறும். காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும் இந்தப் படத்தில் காதலையும் ஒரு மெல்லிய கவிதையாகக் காட்டியிருக்கிறோம்.

"மதுரை டூ தேனி' படத்துக்கு இசையமைத்த ஜான் பீட்டர் இந்தப் படத்துக்குச் சிறப்பான முறையில் இசையமைத்திருக்கிறார். தலைப்பில் "சைதை செல்லா' என்று இருந்தாலும் மதுரையில்தான் கதையின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம்'' என்றார் இயக்குநர் சீத்தாபதி.

600 கார்.. 100 பேர்!

சினேகா போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் "பவானி' படத்தை இயக்கி வரும் ஜி.கிச்சா, அதே நேரத்தில் அர்ஜுன் நடிக்க "மாசி' என்ற இன்னொரு போலீஸ் கதையையும் இயக்கி வருகிறார். இதற்கு முன் எத்தனையோ படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் இதுவரை யாருமே நடித்திராத ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம் அர்ஜுன்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவு செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் கே.எஸ்.கோவை மணி. குறிப்பாக, அர்ஜுன், பொன்னம்பலம் கூட்டத்தினர் இடையே நடைபெறும் ஒரு சண்டைக் காட்சி, 600 கார்களுக்கு மத்தியில் 100 சண்டைக் கலைஞர்களுடன் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ஏழு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சண்டைக் காட்சிக்கு ஏழு கேமராக்களைப் பயன்படுத்துவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை.

காமெடி காரம்!

"மாயாண்டி குடும்பத்தார்' படத்துக்குப் பிறகு மீண்டும் ஏராளமான இயக்குநர்கள் கூட்டணியாகக் களமிறங்கியிருக்கும் புதிய படம் "மிளகா'. ஜீவா அறிமுகமான "ஆசை ஆசையாய்' படத்தை இயக்கிய ரவிமரியா இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபல ஹிந்தி ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...

""படத்தின் நாயகன், மிளகாப் போன்ற காட்டமான குணத்தைக் கொண்டவன். மிளகாப் வியாபாரியும்கூட. அதனால் இந்த டைட்டிலைப் பயன்படுத்தியுள்ளோம்.

மதுரையை மையமாக வைத்தே படத்தை எடுத்துள்ளோம். மதுரையை வைத்து படம் எடுத்தால் வெற்றி பெறும் என்பதை விட அழுத்தமான கதையை நம்பி எடுத்தால் படம் வெற்றி பெறும் என்பதில்தான் எனக்கு நம்பிக்கை. மதுரையில் வீரம் என்பதைவிட நையாண்டி அதிகம் இருக்கும்.

அதைத்தான் இந்தப் படத்தில் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறோம். ஜெகன்னாத், சிங்கம்புலி, ஜி.எம்.குமார் உள்ளிட்ட பல இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் நடித்துள்ளனர். அதனால் படத்தை உருவாக்குவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து விரைவாகவும் சிறப்பாகவும் நடித்துக் கொடுத்தார்கள்'' என்றார் இயக்குநர் ரவிமரியா.

பேரரசுக்கு டி.ஆர். தந்த குத்து!

பரத், சுனேனா நடிக்கும் "திருத்தணி' படத்தை இயக்கும் பேரரசு, அந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவரும் அவரே. இதில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

தெலுங்கில் ஷ்ருதி!

ஹிந்தியில் "லக்' மூலம் அறிமுகமான ஷ்ருதிஹாசனுக்குத் தமிழில் நடிக்க பெரிய கம்பெனிகளில் இருந்து அழைப்புகள் வந்தாலும் அடுத்து தெலுங்குப் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்த இந்தக் கதையைப் பிரகாஷ்ராவ் இயக்குகிறார். தெலுங்கின் இளம் முன்னணி ஹீரோ சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.