மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் வடுகபட்டி - ராஜபாளையம் இடையிலான சாலைப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் - கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றான 230 கி.மீ. நீள மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச் 744) தரம் உயா்த்தப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்தப் பணியை 3 கட்டங்களாக முடிக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக மதுரை மாவட்டம், திருமங்கலம், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் இடையே 71.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.1,318 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பணிகள் தொடங்கின.
இதில் திருமங்கலம் - வடுகபட்டி (36 கி.மீ.), வடுகபட்டி - ராஜபாளையம் (35.6 கி.மீ.) என இரு பிரிவுகளாகப் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வடுகப்பட்டி - ராஜபாளையம் இடையே சாலை அமைக்கும் பணிகள் 99.7 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், அழகாபுரி மேம்பாலம், ராஜபாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடையாததால், சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இம் மாத இறுதிக்குள் பணிகளை முடித்து வடுகப்பட்டி - ராஜபாளையம் இடையே நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









