/

காவியமாகும் காதல் மண வாழ்க்கை!

காதல் திருமணம் செய்து கொண்டு சிறப்பான வாழ்க்கை நடத்திய ஆசிரியர்கள் பாரதியும், கணவர் செல்வமும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் தனித்துவம் பெற்றவர்கள்.

News image
ஆசிரியர் க.செல்வம் –ஆசிரியை கு.பாரதி தம்பதி.
Updated On :7 பிப்ரவரி 2024, 6:30 am

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த செக்கடிப்பட்டி கிராமத்தில் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கு.பாரதி (52). மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரை பூர்விகமாகக் கொண்டவர் க.செல்வம் (54). இருவரும் வாழப்பாடி அருகிலுள்ள பேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தனர். ஒரே பள்ளியில் பயின்ற இருவரும் நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போது சந்தித்துக் கொண்டனர். இத்தருணத்தில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் ஆரம்பக் கட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டதாரிகளான இருவரும் பெற்றோர்களை சமாதானம் செய்து, திருமணம் செய்து கொண்டனர்.

வேலை கிடைக்காத நிலையில், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்திற்குச் சென்று தேநீர் கடை திறந்து நடத்தி பிழைப்பைத் தொடங்கினர். இதன் பிறகு, இருவரும் ஒரே ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து படித்தனர். 2 ஆண்டுகள் பல்வேறு சிரமத்திற்கிடையே பயிற்சியை முடித்து, இருவரும் வாழப்பாடியிலுள்ள கிறித்துவர்களின் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். இத்தம்பதியருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து போனது. இதனையடுத்து ஒரு பெண் குழந்தையும்  மாற்றுத்திறனாளியாகப் பிறந்தது. இருப்பினும் மனம் தளராமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர். மாற்றுத்திறன் குழந்தையை மனம் கோணாமல் தொடர்ந்து பராமரித்து வந்த இத்தம்பதியருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்ததோடு, அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. மூன்றாவதாக பிறந்ததால் இக்குழந்தைக்கு முத்துராசா என பெயரிட்டனர்.

Story image

பள்ளிப் பருவத்திலேயே கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம் மீது அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்த பாரதி, தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். வாழப்பாடி பகுதியில் பல்வேறு அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை பாரதி,  தனது பன்முகத்திறத்தால் தரமான கல்வி கற்பித்து, ஆயிரக்கணக்கான கிராமப்புற  மாணவர்கள், பெற்றோர்களின் அன்பைப் பெற்றுள்ளார்.

தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு, பேசவும், எழுதவும், ஆடவும், பாடவும் பயிற்சி பெற்று, பட்டிமன்றங்கள், கவியரங்கங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறனை வெளிப்படுத்தி பாராட்டுதலை பெற்றதோடு, மற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

தன்னைப் போலவே பள்ளிச் சிறார்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட தனது கணவர் செல்வத்துடன் இணைந்து, சாரணர் இயக்க ஆசிரியர் பயிற்சி மற்றும் பயிற்றுநர் பயிற்சி பெற்றார். இருவரும் இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக அரசுத் தொடக்கப்பள்ளியில் குருளையர் சாரணர் இயக்கத்தை தொடங்கி, 20 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆண்டுதோறும்  வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியருக்கு, இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் சாரணர் இயக்க உயரிய விருதான ‘தங்க அம்பு’ விருது பெற்றுக் கொடுத்து சாதனை படைத்தனர்.

மாணவர்களுடன் ஆசிரியை பாரதி

மாணவர்களுடன் ஆசிரியை பாரதி

சாரணர் இயக்கத்தில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வரும், தற்போது பேளூர் உருதுப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரியும் க.செல்வத்திற்கு, மாநில சாரணர் இயக்கம், சாரண ஆசிரியர்களுக்கு வழங்கும் உயரிய விருதான, ‘நெடுநாள் சேவையாளர் பதக்க விருது’ வழங்கி, தமிழக அரசு பாராட்டியது. சோமம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பணிபுரிந்த கு.பாரதிக்கு, சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலாசாரம் மீதும், ஆன்மீகத்தின் மீதும் அளப்பரிய பற்று கொண்ட பாரதி, வாழப்பாடி பகுதியில் நல்லதொரு மனநல, மனித வள மேம்பாட்டு ஆலோசகராக வலம் வந்தார். தனது வசீகரப் பேச்சால், வழி தவறிய மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை நெறிப்படுத்தினார். எதிர்பாராமல் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஆசிரியை பாரதி கடந்தாண்டு மறைந்தார்.

காதல் திருமணம் செய்து கொண்டு சிறப்பான வாழ்க்கை நடத்திய கு.பாரதியும், இவரது கணவர் க. செல்வமும், கல்வி கற்பிப்பதில் மாணவர்களுக்கு பல்கலைத்திறன் வளர்ப்பதில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கல்விப் பணியாற்றுவதில் மட்டுமின்றி, உறவுகளை போற்றுவதிலும் தனித்துவம் பெற்றவர்கள் என்றால் இது மிகையன்று.

காதல் திருமண வாழ்க்கை குறித்து ஆசிரியர் க.செல்வம் கூறியதாவது:

நானும் எனது மனைவி பாரதியும் ஒருவரை ஒருவரை நேசித்தோம். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பக் கட்டத்தில் எங்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. 3 ஆண்டுகள் காத்திருந்து பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றே திருமணம் செய்து கொண்டோம். இருவரும் இன பாகுபாடின்றி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதனால், இரு தரப்பு உறவுகளும் பலமானது. இல்லற வாழ்க்கையில்  பல்வேறு சோதனைகளைத் தாண்டி பயணித்து மாணவர்கள் மனதில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம்பிடித்தோம். இதுவே எங்கள் காதலுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழப் பழகிக் கொண்டால் காதல் வாழ்க்கை காவியமாகும். திருமணத்திற்கு முன்பும் பின்பும் புரிதல் இல்லாத காதல் கசப்பாகி விடும்.

சோதனையான காலங்களில் எனக்கு தோள் கொடுத்த எனது மனைவி, சாதித்த பிறகு வாழ்வதற்கு இறைவன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் எனது மனைவி எப்போதும் என்னுடன் இருப்பதைப்போலவே கருதி நான் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.