காளான் குடைகள் - நாஞ்சில் நாடன்
தனது ஒரே சாமர்த்தியம் கதை எழுதுவது என்பதும், பெண்ணைப் பெற்றவன் எந்த ஈர்ப்பும் அதனால் கொள்ளப் போவதும் இல்லை என்பதும் உண்மை


கல்யாணம் பற்றி அவனுக்கும் கனவுகள் இருந்தன. புளியங்கொட்டை போல வேகவைக்கப்பட்ட ஐ.ஆர்.எட்டு அரிசிச் சோற்றை கண்ணனூர் மெஸ்ஸில் குழம்பு விட்டுப் பிசையும் போதும், ஞாயிறுகளில் காலை எழுந்ததும் பாயிண்டில் ஊற வைத்த பேண்ட் சட்டையைத் துவைக்கும் போதும், எப்போதாவது காய்ச்சல் கண்டு படுக்கும் போதும், காரணமற்ற மனம் சோர்வு கொள்கையிலும் முன்பெல்லாம் கல்யாணம் பற்றிய எண்ணம் வரும்.
முப்பது வயது தாண்டிய பிறகு இரவுகளின் நீட்சி வேதனையைத் தந்தது. அதை விடவும் மனைவியின் உடல் என்ற தேவை இருப்பு கொள்ளாமல் ஆக்க முயன்றது.
சில்லறையாகத் துண்டு விழும் நேரப்பகுதிகளை தொலைக்க நண்பர்கள் யாரும் அகப்படா விட்டால், அவன் அந்த நான்கு முனைச் சந்தியின் ஒரு மூலையில் நிற்பதுண்டு. பக்கத்தில் தென்னிந்திய சிற்றுண்டி விடுதியும், பரசுராமன் செய்தித்தாள் கடையும்; சிமெண்ட் தடுப்பு வெளியில் கையூன்றி போவோர் வருவோரைக் காண்கையில் படையாக மனதில் அரிக்கும் ஏக்கம். சில சமயங்களில் பொறாமை கூட.
கனகாம்பரமும், மல்லிகையும் சரமாகச் சூடி, கன்னி இளம் கவள்களில் வெட்கமும் ஆசையும் வித்தாரக் கதை சொல்ல, தோழனின் தோளிடுத்து நடக்கும் குமரிகள்.. காப்பிக்கு கிண்ணத்தை கையில் உருட்டிக் கொண்டிருக்கையில் எதிர் சீட்டில் ஒரே தட்டில் வடா சாம்பார் சாப்பிடும் கணவன் மனைவி... இரவு எட்டு மணிக்கு மேல் 'மகேஸ்வரி உத்யானி' ல் ஒற்றை நாற்காலியில் சாய்ந்து எதையாவது சிந்திக்க முயல்கையில் கண்ணைக் கவர்ந்திழுக்கும் காதல் காட்சிகள்.
எல்லோரையும் போலவே கல்யாணம் பற்றிய கனவுகள் அவனுக்கும் இருந்தன.
எல்லாப் பக்கமும் நெருக்கும் செலவினங்கள், சுமந்தே ஆக வேண்டிய பொறுப்புகள், பழைய பள்ளங்களைத் தூர்க்கும் முயற்சிகள்...
அப்படியும் இப்படியும் முப்பது தாண்டிய பிறகு அவன் கல்யாணம் செய்து கொள்ள இசைவு தெரிவித்தான்.
இசைவு சொல்லும் போதே அவனுக்குப் பயங்கள் இருந்தன. கல்யாணத்துக்கு நிற்கும் பெண்களின் கனவுகள் என்னவாக இருக்கும் என்று அவன் கணக்கிட்டு வைத்திருந்தான். உயரமான, உறுதியான உடல், சிவந்த மேனி, சுருள் முடிகள், நான்கு இலக்க சம்பளம், வசதியான ஃபிளாட், ஸ்கூட்டர், டி.வி, ஃபிரிட்ஜ், தமிழ் சினிமாக்களும் வாராந்திரிகளும் கற்பிக்கும் ஒரு சல்லாப லோகம்.
இதில் யாதொன்றும் அவனிடம் கிடையாது. எதன் மீதும் கவர்ச்சியும் கிடையாது. அவன் வாழ்வின் இலக்குகள் காணாமல் போயிருந்தன. கல்யாணமான பிறகு, தன் மனைவி ஆகப் போகும் பெண்ணின் நம்பிக்கை எலும்புகள் முறிகின்ற சத்தத்தை இப்போதே அவனால் கேட்க முடிந்தது.
வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் காதல் வயப்படும் அல்லது வயமாக்கும் குண இயல்புகள் தனக்கு இல்லை என்பதை அவன் அறிவான். அது இல்லாமற் போனதிலும் அவனுக்கு வருத்தங்கள் உண்டு. மொழி, மதம், இனம் எனும் தளைகளைத் தாண்டி தனது மண உறவு அமைய வேண்டும் என்று மனப்பூர்வமாக அவன் ஆசைப்பட்டான். மறுபாலரோடு எந்த நேயமோ -- நேயத்துக்கான தொடக்கமோ இல்லாத போது, இது எப்படிச் சாத்தியம் என்றும் அவன் அலுப்படைந்திருந்தான்.
பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து கடிதங்களை பரிசீலித்து பெண்களைக் கண்டு பேசி என்பது போலான வழிகளை அமலாக்க அவனுக்கு ஊக்கமில்லை. எனவே நாஞ்சில் நாட்டுக் கிராமம் ஒன்றில் இனமும் வழியும் துப்புரவுள்ள குடும்பத்தின் பெண்ணாகவே தன் பெற்றோர் தேடுவார்கள் என்பதை ஒருவகை சோகத்துடன் அவன் ஊகித்திருந்தான். பூப்பெய்திய பெண் வீட்டை விட்டு வெளியே கல்லூரிக்கோ, பள்ளிக்கோ, கோயிலுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ இறங்கினால் கற்புக்கு களங்கம் என்று எண்ணும் வட்டார மனப்பாங்கு அவனுக்குத் தெரியும். எனேவ படித்த வேலை பார்க்கும் பெண்ணைத் தேடச் சொல்வதை விடவும் புலிப்பாலே கேட்டிருக்கலாம் என்று எண்ணுகையில் சிரிப்பு வரும்.
தனது ஒரே சாமர்த்தியம் கதை எழுதுவது என்பதும், பெண்ணைப் பெற்றவன் எந்த ஈர்ப்பும் அதனால் கொள்ளப் போவதும் இல்லை என்பதும் உண்மை. அவன் எழுதும் பத்திரிகைகளின் பெயர்களைக் கூட அந்த வட்டாரத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை எழுத்தை ஒரு தொழிலாகத் தொடங்கி நடை பாதைக் கடை விரித்து- ' ஓரணா, ஒன்ரையணா, ஒன்ரையணா ஓரணா ஓரணா ஒன்றரையணா ஓரணா' என்று ஆரம்பித்திருந்தால், சிலரேனும் வியப்பில் நெற்றி சுருக்கி இருக்கக் கூடும், அதில் அவனுக்கு ஏமாற்றம் இல்லை.
இவை யாவற்றையும் மீறி, சமீப காலமாக கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு ஆசை ஏற்பட்டது.
தகப்பனார் கடன்களைத் தீர்த்ததும் தம்பிக்கும் வேலை அமைந்ததும்...
தனக்கு நூறு ரூபாய் சம்பள உயர்வு கிடைத்ததும் காரணமாகி, அவனுள் மாலை பூக்கத் துவங்கியது.
வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் ஏதேனும் செய்தி தாங்கி வராதோ என்று அவன் ஏங்க ஆரம்பித்தான். ஊருக்குப் போய் வரும் நண்பர்கள் வாய்மொழியாக ஏதேனும் சொல்ல மாட்டார்களா என மனம் அலைந்தது. பருவ மழை பொழிந்து கொண்டிருந்த ஒருநாளில் முதல் தபாலில் அந்தக் கடிதம் வந்தது.
அவனுடன் படித்த ஒருவன் சென்னையில் இருந்தான். உடன் வேலை பார்க்கும் ஒருவனின் தங்கை. தகப்பனார் ஒரு தொழில் முறை தொடர்கதை எழுத்தாளர்.
அவர் பெண் எம்.ஏ படித்து விட்டு வேலை பார்த்து வருபவள் என்றும், இருபத்தியோரு வயது என்றும் கடிதத்தில் தடயங்கள் இருந்தன. ஊக்க போனஸாக பெண்ணின் பெயரும் இருந்தது. ஆறேழு மாதங்கள் முன்பு வெளியான அவன் முதல் நாவலைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதும். 'இலக்கிய' ஈடுபாடு கொண்ட அவனோடு உறவு அமைவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார்கள் என்பதும், அவனுக்கு கிளுகிளுப் பூட்டிய சமாச்சாரங்கள்.
நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு கடைசி பஸ்ஸைப் பிடித்து தங்குமிடம் வந்து, பால்கனியில் படுத்துக் கொண்டு வானில் ஊரும் குறைமதியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவனுக்கு கனவுகள் வளர்ந்தன. ஒலி எழுப்பாமல் பெண்ணின் பெயரைச் சொல்லிப் பார்க்கையில் சுகம் இருந்தது. அந்த முகம் எது போலிருக்கும் என்று அகத் தேடல்கள் துவங்கின.
சிலசமயம் சிரிப்பாக இருந்ததது. மனம் ஏன் இப்படி அலைகிறது? காய்ந்த மாடு கம்பில் விழுவது போல் இது என்ன இரப்பாளித்தனம்?
பலமுறை எண்ணிப் பார்த்த பிறகு மனம் அதில் கவர்ச்சி இழந்து போய் அன்றாட வாழ்வின் நெருக்கத்தில் சிக்கியது.
சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது. அந்தப் பெண்ணின் தமக்கை கணவர் பம்பாயில் இருந்தார். அவனைக் கண்டு பேச விருப்பம் காட்டினார். இடமும் நேரமும் குறிப்பிட்டுச் சொன்னான்.
இரண்டு நாட்கள் மனம் குதூகலம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட அந்த மாலையில் அலுவலகம் முடிந்து ஹார்பர் பிராஞ்சு ரயிலேறி கிங் சர்க்கிளில் இறங்கி நடந்த்து தமிழ்மன்ற வாசலுக்குப் போனபோது, சாலையைப் பார்த்துக் கொண்டு உத்தேசம் முப்பத்தாறு வயதுடைய ஒருவர் நிற்பதை அவன் கண்டான். ஒரு வேளை அவராகவே இருக்கலாம் என்று எண்ணினாலும் அவரிடம் போய் எப்படிக் கேட்பது என்று கூச்சப் பட்டு அவன் முதல் மாடியில் இருக்கும் படிப்பகத்துக்குப் போனான்.
காற்றாடியைச் சுழல விட்டு, நாற்காலி ஒன்றில் வசதியாக உட்கார்ந்து கொண்டது கையில் இருந்த பல்லக்கு தூக்கிகள் புத்தகத்தைப் படிக்க முயன்றான்.
சில நிமிடங்கள் சென்ற பிறகு யாரோ வருவது கேட்டது. தலை நிமிர்ந்தும் அந்த மனிதர்....
முதல் பெண்ணைக் கட்டியவர் சென்னையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் என்றும், தானொரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் என்றும், மைத்துனன்மார் இன்னின்ன வேளைகளில் இருப்பவர்கள் என்றும், அந்த ஆள் சொன்னதைக் கேட்டு அவன் மனதில் ஒரு தாரதம்யம் எழுந்து நின்றது.
என்றாலும் தானொரு எழுத்தாளன் அல்லவா என்ற தன் முனைப்பு வாழைக் குருத்தாய் வெளி நீண்டது.
'உடன்பிறந்தோர் எத்தனை பேர்? சம்பளம் எவ்வளவு? பதவி உயர்வு எப்படி? பம்பாய் வந்த ஆண்டு என்ன? தமிழ்நாட்டுக்கு கிளைகளில் மாற்றலாகும் வாய்ப்பு உண்டா? என்றெல்லாம் கேள்விகள்...
துர்கா பவனில் காப்பி வாங்கி கொடுத்து அந்த ஆளை அனுப்பிய பிறகு அவன் உற்சாகமிழந்தான். உள்மனம் இது தனக்கு ஒவ்வாது என்றது.ஒத்து வந்தாலும் புலிக்கு வால் போல் ஒரு இடம் கொள்வதில் அறிவு மறுப்புச் சொல்லியது. உட்கவிதலோடு அவன் தங்கும் இடத்துக்குப் போனான்.
பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு எதிர்பார்ப்பு இல்லாத ஒருநாளில் ஒருவகை மெத்தனத்துடன் ஊரில் இருந்து கடிதம் வந்தது. 'அசைவம் உண்பதுண்டு என்று அவர்களிடம் ஏன் சொன்னாய்? அதனால் வேண்டாம் என்கிறார்கள்? என்று ஒரு குற்றச் சாட்டுத் தொனியைக் கண்டு அவனுக்குத் தன் பெற்றோர் மீது கோபம் வந்தது.
தினமணி கதிர் - 8/8/80
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...