/

செ.குளோரியான்

பாடல் - 5

பவளம்போல் கனிவாய் சிவப்ப நீ காண வந்து
நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
தாமரை தயங்க நின்று அருளாய்,
பவள நன் படர்க்கீழ்ச் சங்கு உறை பொருநல்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்,
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய் சினப் பறவை ஊர்ந்தானே.

பவளக்கொடிகள் நன்றாகப் படர்ந்திருக்க, அவற்றின் கீழே சங்குகள் திரண்டு காணப்படுகின்ற தாமிரபரணி ஆற்றின் கரையிலே, குளிர்ந்த திருப்புளிங்குடியிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்பவனே, கவளம் உண்ணும் சிறந்த யானையாகிய கஜேந்திரனின் துன்பத்தைப் போக்குவதற்காக, தடாகத்தின் கரையிலே, எரியும் கோபத்தைக் கொண்ட பறவையாகிய கருடனைச் செலுத்தி வந்தவனே, பவளம்போன்ற, கனிபோன்ற உன்னுடைய திருவாய் சிவக்கும்படி நீ இங்கே வரவேண்டும், நாங்கள் அதைக் காணவேண்டும், ஒளிநிறைந்த முத்துக்களைப்போன்ற உன்னுடைய திருப்பற்கள் ஒளி வீச நீ முறுவல் செய்யவேண்டும், உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்கள் ஒளியைப் பரப்ப இங்கே நின்று நீ அருளவேண்டும்.

பாடல் - 6

காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
மீமிசைக் கார்முகில்போல
மாசின மாலி, மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே, கதிர் முடியானே,
கலி வயல் திருப்புளிங்குடியாய்,
காய் சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு
ஏந்தி எம் இடர் கடிவானே.

பொன்மலையின்மீது கருமுகில் தவழ்வதைப்போலக் கோபமான பறவையாகிய கருடன்மீது ஊர்ந்து வந்து, மிகுந்த சினத்தையுடைய மாலி, சுமாலி ஆகியோர் அழியும்படி சீறி நின்ற அரசே, கதிர்வீசும் திருமுடியைக் கொண்டவனே, செழித்த வயல்களையுடைய திருப்புளிங்குடியிலே அருள்புரிபவனே, கோபம் கொண்ட சக்ராயுதம், சங்கு, வாள், வில், தண்டாயுதம் ஆகியவற்றை ஏந்தி எங்கள் துன்பங்களை அழிப்பவனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.