நிலாவிடுதூது: அழகூர். அருண். ஞானசேகரன்


கண்ணியம் தனையெலாம் இழந்திட்டும்---கடமை
கட்டுப் பாட்டையும் இழந்திட்டும்,
எண்ணந் தனிலெந்தத் தெளிவுமின்றி---கொடிய
இழிவினை ஏற்கவும் துணிந்திட்டார்!
உண்மையை நேர்மையைக் காவாத---அந்த
உலுத்தர்கள் தமையார் பொறுத்திடுவார்?
வெண்மதி நிலவே அவர்களிடம்---நீசென்று
விளக்கத்தை ஊட்டிட வேண்டுவனே!
மாண்பினை இழந்திட்டக் குடிமக்களாய்---கொடிய
மமதையைக் கொண்டிட்ட அரக்கர்களாய்,
காண்கின்ற ஈனர்கள் ஆட்சிதனில்---எதனைக்
கண்டிட்டு மகிழ்வார் மக்களெல்லாம்?
வேண்டிய மட்டும் சேர்த்திட்டுக்---குலமெலாம்
விளக்கத்தைக் கண்டதும் கேவலமே!
வான்தனில் நீந்திடும் வெண்ணிலவே---சென்று
வகையாய் அவர்கட்கு உணர்த்திவிடு!
சிந்திக்க எந்தவோர் சிறப்புமில்லை!---நல்ல
சிறப்புற்றத் திறன்கள் எதுவுமில்லை!
வந்திட்ட ஆட்சிகள் தன்னாலே---கொண்ட
வளமையை இழந்ததே நாடிதுவும்!
எந்தவோர் நிலையிலும் மக்களவர்---இனி
இவர்களைத் தேர்ந்திட மாட்டாரென,
சந்திர நன்மகள் நீசென்று ---அந்த
சழக்கர்க்கு உணர்த்திட வேண்டுவனே!
ஊரதே தூற்றிட்டு வசைபாட---இந்த
உலகோர் கண்டிட்டு சிரித்துநிற்க,
சீரற்றத் திறன்தனைக் கொண்டவரால்---இன்று
சிறப்பினை இழந்ததே இன்னாடும்!
கோர முகந்தன்னைக் கண்டுகொண்டார்---மக்கள்
கொண்டிட்ட நம்பிக்கை தனையிழந்தார் !
பூரண நிலவுந்தன் திறனறிவேன்---அவர்க்கு
புத்தியை ஊட்டிட வேண்டுவனே!
நலத்திட்டம் என்னும் பெயராலே---இந்த
நாட்டவர் தமையெலாம் ஏய்த்திட்டே,
பலப்பலக் கோடிகள் கொள்ளையிட்டு---நாடிதும்
பாழ்படக் காரணம் என்றானார்!
குலமதன் விளக்கம் தனைக்கண்டார்---இந்தக்
கொடுமைக்கும் எல்லையே கிடையாதோ?
நிலவே உனைநான் தூதுவிட்டேன்---சென்று
நீசர்க்கு இன்னதை உணர்த்திடவே!
வெம்புலிக் காடதே சிறந்ததென---மக்கள்
வெம்பிடும் வகைதனில் இன்னலுற்றார்!
தம்மின் குலமெலாம் விளக்கமுற---மனதைத்
தறிகெட்ட வகைதனில் போகவிட்டு,
கும்மியிட்டு ஊரிதைக் கொள்ளையிட்டார்---இந்தக்
கொடுமையை மக்கள் மறக்கமாட்டார்!
அம்புலிநீ என்சார்பில் தூதுசென்று---அந்த
அற்பர்க்கு உணர்த்திட வேண்டுவனே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...