நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தேடினாலும் விடை கிடைக்கவில்லை...

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை, அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது.  2010-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 10 லட்சம் பேரும், பிளஸ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

ஆர். ஆதித்தன்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை, அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது.

 2010-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 10 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை சுமார் 7.43 லட்சம் பேரும் எழுதியுள்ளனர். பிளஸ் 2-வில் மட்டும் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. ஆக மொத்தம் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விடைத்தாள்கள் ஆசிரியர்களால்  திருத்தப்பட்டு, பாட வாரியாக மதிப்பெண்களை பட்டியலிட்டு சான்றிதழாக  அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

இது பெரும் பணிதான் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அரசு தேர்வுத்துறையில் சிறிய தவறு நேர்ந்தாலும், அது பெரிய குளறுபடியில் கொண்டு போய்விட்டு விடுகிறது.

இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியின்போது திருச்சி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 262 மாணவர்களின் இயற்பியல் பாடத்துக்கான விடைத்தாள்கள், கோவை விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும்போது மாயமானது. தபால் துறை மூலம் பதிவு செய்யப்பட்ட பார்சல்  அனுப்பியதாக தேர்வுத்துறை தெரிவித்தது.

மாயமான விடைத்தாளை கண்டுபிடிக்க ஒரு பக்கம் அரசுத் தேர்வுத்துறையும் மறுபக்கம் போலீஸôரும் தீவிரமாகத்  தேடினர். ஆனால்  மாயமான விடைத்தாள்கள் கிடைக்கவில்லை. விடைத்தாள் மாயமான விவகாரத்தில் தபால்துறையின் மெத்தனமான அலட்சியப் போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

 மாணவர்களின் விடைத்தாள்கள் கிடைக்காததால் 262 மாணவர்களுக்கு, ஏப்ரல் 22-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

மீண்டும் புதிய பிரச்னை:

இப்போது அதே திருச்சி மாவட்டத்தில் மீண்டும் புதியதொரு பிரச்னை எழுந்துள்ளது. அதுவும் அரசு தேர்வுத்துறை தொடர்புடையது தான். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே  26-ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், திருச்சி கல்வி மாவட்டத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1,456 மாணவ, மாணவிகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது தெரியவந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்திரமாக லாரி மூலம் மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன என்று அரசுத் தேர்வுத் துறை விளக்கம் அளிக்கிறது. இதற்கான முறையான ஆவணங்களும் உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தான் முறையாகப் பெற்று மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவது வழக்கம். இம்முறை என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

காணாமல் போன மாணவர்களுக்கு பிரதிபலனாக புதிய மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை விளக்கம் அளித்தது.

திருச்சி மாவட்டத்தில் முதலில்  பிளஸ் 2  விடைத்தாள் மாயம், தற்போது பத்தாம் வகுப்பு 1,456 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மாயம் என இரு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. இது கல்வித்துறையின் அலட்சியமா அல்லது தேர்வுத்துறையினரின் மெத்தனப் போக்கா என தெரியவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

""மாயமான விடைத்தாளும் சரி, காணாமல் போன மதிப்பெண் சான்றிதழும் சரி, இரண்டுமே கடைசி வரையில் கிடைக்கவில்லை. இம்மாதிரியான விஷயங்களில் அரசு தேர்வுத்துறை முழுமையாக விசாரித்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. அதிக கவனத்துடன் கல்வித்துறை செயல்பட வேண்டும். சிறிய குளறுபடி ஏற்பட்டாலும்கூட அதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்''என்றார் கல்வியாளர் வசந்திதேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.