ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிகர்நிலைப் பல்கலை.களுக்கு புதிய முகம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வேந்தர், துணை வேந்தர் நியமனம், இணைவேந்தர் பதவி ஒழிப்பு, நிர்வாகக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் போன்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எ

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

சிவ. மணிகண்டன்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வேந்தர், துணை வேந்தர் நியமனம், இணைவேந்தர் பதவி ஒழிப்பு, நிர்வாகக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் போன்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்றாலே குடும்ப ஆட்சி என்ற நிலையை மாற்றி அவற்றுக்கு புதிய முகம் கொடுக்க இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நாடு முழுவதும் 130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டிலேயே அதிகபட்சமாக 29 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருப்பது தமிழகத்தில்தான். இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 21 பல்கலை.களும், கர்நாடகத்தில் 15 பல்கலை.களும் செயல்பட்டு வருகின்றன.

 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்துவதற்கும் மாநில அளவில் அமைப்புத் தேவை என்பது நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில் தற்போது நிகர்நிலைப் பல்கலை.களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் சில பல்கலை.கள் கல்வித் தரத்திலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், பெரும்பகுதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருவது கண்காணிப்பு அமைப்பு தேவை என்பதை உணர்த்துவதாக இருந்தது.

 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்றாலேயே அக் கல்வி நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகளின் குடும்பத்தினரின் ஆதிக்கம்தான் இருக்கும். வேந்தர், இணைவேந்தர்கள் என குடும்ப உறுப்பினர்கள்தான் முக்கியப் பொறுப்பில் இருப்பார்கள். பல்கலை.யின் நிர்வாகக் குழுவின் தலைவராக வேந்தர் அல்லது வேந்தரின் பிரதிநிதிதான் இருப்பார். அவர்கள் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக அமையும். இதனாலேயே, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 அரசுப் பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் மற்றும் துணைவேந்தருக்குத்தான் அதிகாரம் அதிகம். அதைப் போல நிகர்நிலைப் பல்கலை.களிலும் துணைவேந்தருக்கும், பல்கலை.யின் நிர்வாகக் குழுவுக்கும் அதிக அதிகாரம் வழங்கும் நடைமுறையை யுஜிசி கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசிதழ் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த அரசிதழ் சுற்றறிக்கையாக அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 நிகர்நிலைப் பல்கலை.யின் வேந்தராக நியமிக்கப்படுபவர், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவராக இருப்பதோடு சிறந்த கல்வியாளராகவும் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைவேந்தர் பதவி இனி நிகர்நிலைப் பல்கலை.களில் இருக்காது. நிர்வாகக் குழுதான் பல்கலை.யின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவாகச் செயல்படும். நிர்வாகக் குழுவுக்குத் துணைவேந்தர்தான் தலைவராகச் செயல்படுவார். 10-லிருந்து 12 உறுப்பினர்கள் இக் குழுவில் இடம் பெறுவர். துணைவேந்தர், இணை துணைவேந்தர், துறைத் தலைவர்கள் இருவர், வேந்தரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் கல்வியாளர்கள் 3 பேர், மத்திய அரசு பிரதிநிதி, ஆசிரியப் பிரதிநிதிகள் இருவர், நிர்வாகத் தரப்பில் ஒரு பிரதிநிதி, பதிவாளர் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இருக்க வேண்டும். பல்கலை.யின் நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக நிர்வாகக் குழு இருக்க வேண்டும்.

 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இருந்தது. தற்போது தேர்வுக் குழு அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  மாணவர் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றில் யுஜிசியின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்களை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த வேந்தருக்கான அதிகாரத்தில் பெரும்பாலானவை தற்போது துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. யுஜிசி வகுத்துள்ள இந்த நெறிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீதான சந்தேக நிழல்கள் விலகும் என்பது சாத்தியமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.