/

அலைகள் ஓய்வதில்லை; சாதனைகள் மறைவதில்லை!

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதிராஜா அளிக்கும் முதல் பேட்டி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

கவியோகி வேதம்

தமிழ்ப்பட உலகில் ஒரு பெரிய திருப்பதையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அவரது "நிழல்கள்" வெளியான நேரத்தில். "போதுமான வரவேற்பை பெறவில்லை என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாமே தவிர அதை ஒரு தோல்விப் படமென்று நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று அவர் சொன்னார்.

அவரது இந்த கருத்து கான்ட்ரவர்ஸி ஆகியது.நிவாஸ் , பாக்கியராஜ் துணையில்லாமல் அவரால் தனித்து நிற்க முடியாது என்கிற அளவுக்கு கூடப் பேசப்பட்டது. அதிலிருந்து அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை பார்த்த மறுநாள் அவருக்கு போன் பண்ணி பாராட்டினேன். உங்களை உடனடியாக பேட்டி காண வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தேன்.

நானே உங்கள் அலுவலகத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்தார் பாரதி.

சினிமா எக்ஸ்பிரஸுக்கு பாரதிராஜா வருகை தருகிறார் என்ற தகவல் 'எக்ஸ்பிரஸ் எஸ்டேட் ' முழுவதும்  தீயாய் பரவியது. கரெக்ட்டாக 11.05 மணிக்கு பாரதிராஜாவின் கார் வந்திறங்கியது. அடுத்து பேட்டி ஆரம்பமாகியது.

தங்களது படங்களில் புதுமைகளும், டெக்னிக்கல்  சிறப்புகளும் இடம்பெறும் அளவுக்கு கதை வலுவாக அமைந்திருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு உங்கள் பதில்..  ?

கதை என்றால் என்ன?  நெஞ்சைத் தொடும் சம்பவங்களின் கோர்வையை வைத்து ஒரு அழகான மெஸேஜ் சொல்ல வேண்டும். அதுதான் கதை.இதுவரை நான் உருவாகியுள்ள எல்லாப் படங்களிலும் மெஸேஜுடன் கூடிய அழகான கதையைக் கொடுத்திருக்கிறேன். கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், அது அவர்களது 'வ்யூ' அவ்வளவுதான்.

ஒரு தயாரிப்பாளர், ஒரு டைரக்டர் கண்ணோட்டத்தில் 'வெற்றிப் படம்' எனபதற்கு சரியான விளக்கம் அளியுங்கள். .

வெற்றிப்படமா அல்லது தோல்விப்படமா எனபது முழுக்க முழுக்க சிலர் வெளியிடுகின்ற விமர்சனங்களை வைத்து மட்டும் தீர்மானிப்பதல்ல. என்னைப் பொறுத்த வரை தோல்விப் படம் என்று நீங்கள் நினைக்கின்ற படம் முழு அளவில் (படத்தை உருவாக்கிய இயக்குனர் என்ற முறையில்) எனக்கு மன நிறைவை அளிக்கிற படமாக இருக்கலாம். அந்தப் படத்தை வெற்றி படமாகத்தான் ஏற்றுக் கொள்கிறேன். ஆகவே இது அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்த விஷயமாகும்.

பட உலகில் சிறந்த சாதனையை படைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் எந்த சாதனையையும் புரிந்திருப்பதாக நினைக்கவில்லை. யாரவது சொன்னால் அது அவர்கள் கருத்து.

"தமிழ்ப்பட உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த "ஸ்டார் சிஸ்டத்தை " உடைத்து எறிந்தது நீங்கள்தானே?

ஸ்டார் சிஸ்டத்தை நான் உடைத்தேன் என்று சொல்லப்படுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அது என் வேலையல்ல. என் படங்களுக்கு "பொருத்தமான " நடிகர்களை  நடிகைகளை தேர்ந்தெடுப்பதால் "ஸ்டார் சிஸ்டத்தை" ஒழித்ததாகி விடாது.

"நிழல்கள்" வெற்றி படம் என்கிறீர்களா?

வெளிவர வேண்டிய காலத்திற்கு சில ஆண்டுகள் முன்னால்  வந்து விட்டது. அதை ஜீரணிக்கும் சக்தியை மக்கள் இன்னும் பெறவில்லை. 

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.08.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.