டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கமல் வீட்டில் சுமலதா!

பகல் மணி 2.30 சுமலதா வந்தார். ஏன்? எதற்காக?

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

பகல் மணி 2.30 சுமலதா வந்தார். ஏன்? எதற்காக?

கமலஹாசனை சுமலதா சந்தித்தபோது நேரம் பிற்பகல் 2.30 மணி. போரூரில் வெளிப்புறக் காட்சியில் நடித்து வந்த சுமலதா, அவசர அவசரமாகக் காரில் கமல் வீட்டிற்கு வந்தார். அந்தச் சந்திப்பில் எவ்வளவு ஆர்வம் இருந்தது  என்பது அதிலிருந்து புரிந்தது.

சுமலாதா – சினிமாவில் நடிக்கின்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

கமலஹாசன் – ஆர்வம், விருப்பம், வெறுப்பு, ஆகிய எதுவுமே தெரியாத குழந்தைப் பருவத்திலேயே நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டேன். அந்த வயதில் தெரியக் கூடியதெல்லாம் லாலிபாப்பும் சாக்லெட்டும்தான்!

சும – ஒரு ‘ஸ்டார்’ ஆவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?

கமல் – ‘ஸ்டார்’ ஆவதற்கா அல்லது ‘ஆக்டர்’ ஆவதற்கா? ஏனெனில் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்டார் ஆவதற்கு முக்கியமாக அதிர்ஷ்டம் தேவை. ஆக்டர் ஆவதற்குத் திறமை அவசியம்.

சும – நீங்கள் தற்போது ஐந்து மொழிப் படங்களில் நடித்து வருவதாக அறிகிறேன். எந்த மொழிப்படத்தில் நடிப்பது எல்லா வகையிலும் சிறந்தது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கமல் : ஒவ்வொரு மொழிப்படங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. ஆகவே ஒன்றில் இருந்து கொண்டு மற்றதைப் பார்க்கும் போது ‘இதைவிட அது தேவலை’ என்று தோன்றும்.

சும – நீங்கள் தற்போது ஏதாவது இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

கமல் – ‘ஏக் அவுர் இதிகாஸ்’ (மரோசரித்ரா) படத்தில் நடிக்கிறேன். ரீனாராவ் சகோதரியுடன் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறேன்.

கமல் – எந்த வகையான திரைப்படங்களை நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறீர்கள்?

சும – முடிந்தவரை எல்லாப் படங்களையும் பார்ப்பேன். ஆனால் ஆங்கிலப் படங்களை அதிகம் பார்ப்பேன்.

கமல் – உங்களை இன்ஸ்பையர் பண்ணிய நடிகை யார்?

சும – ஷோபா

கமல் – வெரிகுட்….வம்பு இல்லாம இருக்கட்டுமென்று அஞ்சலிதேவியின் பெயரையோ அல்லது பானுமதியின் பெயரையோ நீங்கள் சொல்லாதது பாராட்டுக்குரியது. ஒரு வேளை ஷோபா இறந்துவிட்டார் என்பதற்காக அவரது பெயரைக் குறிப்பிடுகிறீர்களா அல்லது உண்மையிலேயே பிடிக்குமா?

சும – இல்லையில்லை. உண்மையிலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கமல் – அவர் உயிருடன் இருந்தாலும் இதையேதான் கூறியிருப்பீர்களா?

சும – நிச்சயமாக இதையேதான் கூறியிருப்பேன். தவிர இப்போது இருப்பவர்களில் லட்சுமியை எனக்குமிகவும் பிடிக்கும். உங்களுக்கு?

கமல் – எனக்குப் பிடித்தவர் இன்னார் என்று ஒரு தனி மனிதரைக் குடிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு அம்சம் பிடிக்கும். சில விஷயங்களில் சிவாஜி கணேசனையும், சிலவற்றில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, ரிச்சர்ட் பர்ட்டன், மார்லன் பிராண்டோ போன்ற பலபேரை எனக்குப் பிடிக்கும். எல்லோரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொள்ள தான் விரும்புகிறேன்.

சும – இப்போது நீங்கள் நடிக்கும் இந்திப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால் உங்களை இந்திக்கு முழுமையாக மாற்றிக் கொண்டு விடுவீர்களா அல்லது இங்குமங்குமாக இருப்பீர்களா?

கமல் – இப்படி இருந்தால் என்கிற சொல் எளீமையானது மட்டுமல்ல, மிகப் பெரியதும்கூட. எனக்கு நிறையபடங்கள் வந்தால், நான் அவற்றை ஏற்றுக் கொண்டால், எனக்கு நேரமிருந்தால் நான் செய்யக் கூடும். அந்த அளவு உறுதியை தான் என்னால் தற்சமயத்துக்கு அளிக்க முடியும்.

சும – ஒரு படத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரோடு நான் நடித்த போது அவர் என்னிடம் கூறினார். அவர் உங்களுடைய ரசிகராம்.

கமல் – அவர் அவ்வாறு அடிக்கடி சொல்வதுண்டு. எந்த அளவுக்கு விலாச மனம் படைத்தவர் அவர் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு.

சும – தற்போது புது முகங்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?

கமல் – இந்த இடத்தில் நான் என்னுடைய வீக்னெஸையும் சொல்லியாக வேண்டும். சமீபகாலத்தில் வெளியான படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை. பார்க்கக் கூடாது என்பதல்ல அதற்குக் கார்ணம். நேரமில்லாமைதான். உதாரணமாக ஒரு தலை ராகம் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த நிலையில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால், அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்படுகிறது அல்லவா? மற்றபடி பிரதாப் போத்தனைப் பிடிக்கும். எனக்குப் பிடித்த மற்றொருவர் ரஜினிகாந்த் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

சும – ஆமாம்….நீங்கள் கற்ற பரதநாட்டியம் பயிற்சி உங்களுக்கு சினிமாத்துறையில் எந்த வகையில் பயன்பட்டிருக்கிறது?

கமல் – அதை நான் இரண்டு படங்களில் பயன்படுத்தி இருக்கிறேனே? அதற்கு மேல் போனால், ‘குமாரி கமல்’ ஆக வேண்டியதுதான்!

சும : (சிரித்துக் கொண்டே) அது சரி. ‘அபூர்வ ராகங்கள்’ போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நீங்கள் ‘மங்கள வாத்தியம்’ போன்ற படங்களில் நடிக்கக் காரணம் என்ன?

கமல் – எனது ரசிகர்கள் அதையும் விரும்புவதுதான்.

சும – ரசிகர்களை அவ்வளவு தூரம் மதிக்கும் நீங்கள் அவர்களது கடிதங்களுக்குப் பதிலே அளிப்பதில்லை போலிருக்கிறதே?

கமல் – சில சமயம் நான் மிகவும் ‘பிஸி’யாக இருந்திருப்பேன். இல்லாவிட்டால் பதில் போடாமல் இருக்கவே மாட்டேன். அது போகட்டும்…நீங்கள் உங்கள் எதிர்காலத்துக்கு என்ன திட்டம் தீட்டி இருக்கிறீர்கள்?

சும –இதுவரை அப்படி எதுவும் யோசிக்கவில்லை.

கமல் – அது மிகவும் தவறு. இந்த நடிப்புலக வாழ்க்கை மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிடும். இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து வருஷங்களுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை இப்போதே செயல்படுவது நல்லது. இல்லையெனில் இன்று பெரும்பாலான நடிகைகளுக்கு ஏற்படுவது போன்ற நிலைதான் உங்களுக்கும் வரும். ஆமாம்…படிப்பு விஷயத்தில் நீங்கள் எப்படி?

சும – ப்ளஸ் டூ வரையில் படித்திருக்கிறேன்.

கமல் – அப்படியானால் என்னைவிட நீங்கள் அதிகம் படித்தவர்!

சும – புது முகங்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

கமல் – புது முகங்களுக்கா? ஒரு வகையில் பார்த்தால் நானே புது முகம் தானே? இருபத்தியோரு வருடங்களுக்கு மேலாக இந்தத் துறையில் இருந்தாலும் இன்னும் நான் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றனவே!

கடைசியாக ‘உங்கள் மனைவி வாணி உங்களுக்கு எந்தவகையில் உதவுகிறார்? என்ற கேள்விக்கு ‘என் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். எனது நடிப்பைப் பற்றி ஒளிவு மறைவு இன்றி விமரிசிக்கிறாள். என் நகைச்சுவையை ரசிக்கிறாள்’ என்று கமலஹாசன் கூறியதைக் கேட்டுச் சிரித்தவாறே விடை பெற்றார் சுமலதா.

-வினோத்

படங்கள் – ஹரீஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.