/

குடியரசுத் தலைவர்கள் சில நினைவலைகள்!

நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர் பாபு ராஜேந்திர பிரசாத். பெரும்பான்மையினர் கருத்துக்கு மதிப்பளித்து, பண்டித ஜவாஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்தை ஆதரித்தார். தொடர்ந்து இரண்டு ம

News image
Updated On :28 ஜூலை 2025, 4:25 am

முனைவா் அ. பிச்சை

நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர் பாபு ராஜேந்திர பிரசாத்.

பெரும்பான்மையினர் கருத்துக்கு மதிப்பளித்து, பண்டித ஜவாஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்தை ஆதரித்தார். தொடர்ந்து இரண்டு முறை இப்பதவியை அலங்கரித்த சிறப்புக்குரியவர் இவர் ஒருவர் மட்டுமே! இவரது பதவிக்காலத்தில் இவருக்கும் பிரதமர் நேருவுக்கும் சுமுகமான உறவு இருந்ததாகச் சொல்லமுடியாது. நேருஜியின் கொள்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் ஒரு தடைக்கல்லாக இவர் செயல்பட்டதாக விமர்சனமும் உண்டு.

இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். - நல்ல சிந்தனையாளர், சிறந்த கல்வியாளர், புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரதமர் இவரை அடிக்கடி சந்திப்பாராம். அப்போது இருவரும் அரசியல், சரித்திரம், சமூகவியல் என்று பல விஷயங்களை அலசுவார்களாம்.

தேசத்தின் மூன்றாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் டாக்டர் ஜாகீர் ஹுசைன். இவரும் சிறந்த கல்வியாளர். இதய நோய் பாதிப்பால் இடையில் காலமாகி விட்டார். இவர் பதவியில் இருந்ததே இரண்டு ஆண்டுகள்தான். இவரது பதவிக்காலத்தில் பிரதமருடன் மோதலோ முரண்பாடோ எழவில்லை.

நான்காவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் பெரும் சர்ச்சைக்கிடையே நடைபெற்றது. காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரி சுயேச்சையாகப் போட்டியிட்டார். காங்கிரசில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்தார். அதன் விளைவாக வி.வி.கிரி குடியரசுத் தலைவர் ஆனார். இவரது பதவிக்காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி குடியரசுத் தலைவருக்கு ஓர் கடிதம் எழுதினார். அதில் "நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1971-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த வி.வி.கிரி, ""அமைச்சரவை கூடி உங்கள் ஆலோசனையை விவாதித்ததா? அப்படி என்றால் அமைச்சரவையின் பரிந்துரை எங்கே?'' என்று திருப்பிக் கேட்டார். உடனே, பிரதமர் இந்திரா காந்தி, அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி, அதன் பரிந்துரையை அனுப்பி வைத்தார். இறுதியில் வி.வி.கிரி, ""அமைச்சரவையின் பரிந்துரையை மிகக் கவனமாகப் பரிசீலித்தேன். அதன் பின்பே இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன்'' என்று எழுதி அனுப்பினார். தனக்கு இந்தப் பதவி கிடைக்க பிரதமர் இந்திரா காந்திதான் முழுக்காரணம் என்றாலும், தனது (குடியரசுத் தலைவரின்) அதிகாரம் என்ன என்பதை உறுதிபட பதிவு செய்தார் வி.வி.கிரி.

ஐந்தாவது குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது. மத்திய அரசில் அமைச்சராகப் பல முக்கிய இலாகாக்களைத் திறம்பட நிர்வகித்தவர். 17-08-1974 முதல் 11-02-1977 வரை இரண்டரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார். பதவியில் இருக்கும்போதே மறைந்துவிட்ட இரண்டாவது குடியரசுத் தலைவர் இவர்.

பக்ருதீன் அலி அகமது 26-06-1975 அன்று அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். மறுநாள் (27-06-1975) தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமைகளின் கீழ் நிவாரணம் தேடும் வழியையும் தடுத்து நிறுத்தும் ஆணையைப் பிறப்பித்தார். இந்த இரண்டு ஆணைகளையும் குடியரசுத் தலைவர் முழுமையாக ஆய்வு செய்யாமல், பிறப்பித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. ஆறாவது குடியரசுத் தலைவராகப் பதவியில் அமர்ந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என்ற பல பதவிகள் வகித்தவர். ஒருமித்த கருத்து அடிப்படை யில் போட்டி எதுவும் இல்லாமல்

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது பதவிக்காலம் பிரச்னை எதுவும் இல்லாமல் சுமுகமாகச் சென்றது. பஞ்சாப் மாநில முதல்வராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த கியானி ஜைல் சிங் 13-7-1982 அன்று இந்தியக் குடியரசின் ஏழாவது குடியரசுத் தலைவர் ஆனார். 1984 நவம்பரில் பிரதமர் இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டபோது, அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது ராஜீவ் காந்தியைப் பிரதமராக நியமித்து, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஜைல் சிங். "காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை நான் காத்திருக்க வேண்டியதில்லை. நெருக்கடியான சூழலில் பிரதமரை நியமிக்கும் தடையில்லா உரிமையும் அதிகாரமும் தனக்கு இருக்கிறது. அதற்குள்ள ஒரே நிபந்தனை - அந்த நியமனத்தை மக்களவை பின்னேற்பு செய்ய வேண்டும் - என்ற தன் நிலைப்பாட்டை, குடியரசுத் தலைவரின் அதிகாரம் இதுதான் என்று உறுதியாகப் பதிவு செய்தார் ஜைல் சிங்.

எட்டாவது குடியரசுத் தலைவராகும் பேறு பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன். ஜூலை 1987 முதல் ஜூலை 1992 வரை இப்பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் பல அரசியல் நெருக்கடிகள் வந்தன. அவர் அப்போது நெருக்கடி கால விளக்காகச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது "பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் மக்களவைக் கலைப்பு அமலுக்கு வரும் என்று ஆணை பிறப்பித்தார் வெங்கட்ராமன்.

அரசியல் நெருக்கடிக்கும் நிதி நெருக்கடிக்கும் ஓர் தீர்வு பிறந்தது என்கிறார் அன்றைய மக்களவை பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப். நாட்டின் 9-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர் சங்கர் தயாள் சர்மா (ஜூலை 1992 முதல் ஜூலை 1997 வரை). இவர் மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது உறுப்பினர்கள் போட்ட கூச்சல், குழப்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதவர். அவ்வளவு மென்மையானவர். "ஒவ்வொரு நாளும் அரசின் செயலாளர்கள் பேப்பர்களைக் கொண்டு வருகிறார்கள்.

நீட்டிய இடத்தில் கையெழுத்து போடச் சொல்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்கக் கூட எனக்கு நேரம் கொடுப்பதில்லை' என்று தனது தர்மசங்கடத்தைப் பற்றியும், அரசின் செயல்பாடுகள் பற்றியும் அவர் வேடிக்கையாகப் பேசியது உண்டு.

பத்தாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றவர் கே.ஆர்.நாராயணன் (25-7-1997 முதல் 25-7-2002 வரை). இந்திய வெளியுறவுப் பணியில் தடம் பதித்த தகைமையாளர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதராகச் செயலாற்றி நல்லுறவை வளர்த்ததுடன், நம் தேசத்தின் நன்மதிப்பையும் உயர்த்தியவர்.

இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இவர் ஓர் லட்சியவாதி, புகழ்பெற்ற விஞ்ஞானி, இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்தவர், நல்ல சிந்தனையாளர், நாடறிந்த பண்பாளர். இவர் ஜூலை 2002 முதல் ஜூலை 2007 வரை பதவி வகித்தவர்.

12-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று இன்னும் சில தினங்களில் ஓய்வுபெற இருப்பவர் பிரதிபா பாட்டீல். ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டு. குடியரசுத் தலைவரான முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரது ஆளுமைக் காலத்தில் இன்று வரை அரசியல் சட்டச் சிக்கல்களோ, சந்திக்க வேண்டிய சவால்களோ எதுவும் எழவில்லை. ஆகவே இவரது காலத்தில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஆக, கடந்த 62 ஆண்டுகளில் பதவி வகித்த 12 குடியரசுத் தலைவர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தால் நாம் அறிவது இதுதான்:

இப்பதவிக்கு வருபவர் முதல் குடிமகன் மட்டுமல்ல, இந்திய தேசத்தின் முதல்தரக் குடிமகனாக... ஏன்... முன்மாதிரிக் குடிமகனாக இருக்க வேண்டும். உலக மக்கள் மற்றும் உலகத் தலைவர்களின் கருத்தையும், கவனத்தையும் ஈர்ப்பவராக இருக்க வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துபவராக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் தேசத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக, வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.