அதற்கு காரணம் இந்நாட்களைப் போல அன்றைய நாட்களில் வீட்டுக்கு ஒன்று, இரண்டு குழந்தைகள் மட்டும் தானா இருந்தார்கள்?! இல்லை அப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதோடு ஒவ்வொரு வீட்டிலுமே, ‘நாமிருவர் நமக்கு மூவர்’ எனும் கான்செப்ட் இருந்தது. அதனால் எவர் ஒருவருக்குமே தனிக் கவனமெல்லாம் கிடைக்காமலே போய் விட்டது. இதற்கு நடுவில் அத்தை மகள், மாமன் மகன், சித்தி மகள் என்று உறவுகள் வேறு எந்நேரமும் உறவுகள் வேறு சூழ்ந்திருப்பார்கள். எனவே அன்றைய குழந்தைகள் அடம்பிடித்தால் முதுகில் நான்கு அறை கொடுத்து செம்மையாக உதைத்து அனுப்புவார்களே தவிர தேவைக்கு அதிகமாகப் பிடிவாதமாக எந்தப் பொருட்களையும் அவர்களிடமிருந்து பெற்று விட முடியாது. இம்மாதிரியான சூழலில் அன்றைக்கெல்லாம் பள்ளியில் டிராமா போடுகிறோம், அதில் எனக்கு ராஜா வேஷம். அதற்கு ஏற்றாற் போல உடை வாங்கித் தாருங்கள் அம்மா... என்று கேட்டால்; உடனடியாக ரெடிமேட் பதிலாக என்ன வந்து விழும் தெரியுமா?! பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டியின் பழம் பட்டுப்புடவைகள் வந்து கூடத்தில் விழும். அதற்கு மேல் ஏதாவது தேவை எனில் தாத்தா உடுத்துக் கழித்த அரை வெள்ளை நிற முக்கால் கை வைத்த காமராஜர் வேஷ்டியும், துண்டும் கிட்டலாம். அவற்றைக் கொண்டு உடை விஷயத்தைச் சமாளித்து விட்டு; மேற்கொண்டு நகைகள் வேண்டுமானால் பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் அத்தை மகள் மற்றும் சித்தி பெண்களை கெஞ்சிக் கொண்டு தொங்க வேண்டும். அவர்கள் இஷ்டமிருந்தால் தருவார்கள், அல்லது தராமலே போனாலும் போவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நல்ல கிராஃப்ட் டீச்சரின் நட்பு மட்டும் கிடைத்தால் அவர்கள் தப்பிப் பிழைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.