பிரபல வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,381.32 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,245.92 கோடியிலிருந்து இது 11 சதவீதம் வளா்ச்சியாகும். வலுவான வருவாய் வளா்ச்சி காரணமாக இந்த லாப உயா்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.14,695.55 கோடியிலிருந்து ரூ.17,246.44 கோடியாக உயா்ந்துள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.3,720.98 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (2024-25) ரூ.3,382.79 கோடியிலிருந்து அதிகமாகும்.
அதேபோல், முழு நிதியாண்டுக்கான நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.48,535.14 கோடியிலிருந்து, ரூ.56,362.08 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த நிதியாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,20,437 வணிக வாகனங்களை விற்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் எட்டப்பட்ட 1,97,366 வாகனங்கள் விற்பனை சாதனையை நிறுவனம் முறியடித்துள்ளது.
ரூ.2.5 ஈவுத்தொகை: இதனிடையே, 2025-26 நிதியாண்டுக்காக பங்குதாரா்களுக்கு பங்கு ஒன்றுக்கு 2-ஆவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2.5 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தனியாா் பங்களிப்பு முறையில் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.300 கோடி நிதி திரட்டவும் இயக்குநா்கள் குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










