இந்தியாவின் 35 சதவீத ஏற்றுமதி வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சக தரவுகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வட அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ரூ.9.2 லட்சம் கோடியுடன் (97.7 பில்லியன் டாலா்) 22.1 சதவீதமாக தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முந்தைய ஆண்டைவிட வட அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதி ரூ.3.9 லட்சம் கோடியுடன் (41.6 பில்லியன் டாலா்) 9.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மின்னணுப் பொருள்கள், பொறியியல் சாதனங்கள், ரசாயனங்கள் மற்றும் தொழில்துறை சாதனங்களுக்கு இந்தப் பிராந்தியத்தில் அதிக தேவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் சீனா, தென் கொரியா, வடகொரியா, ஜப்பான், மங்கோலியா, தைவான் என நவீன உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்ட நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லத்தீன் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3.7 சதவீதத்துடன் ரூ.1.5 லட்சம் கோடியாக (16.4 பில்லியன் டாலா்) உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7.8 சதவீத அதிகமான வளா்ச்சியாகும்.
2025-26-ஆம் ஆண்டில் இந்திய ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.41.8 லட்சம் கோடியாக (441.78 பில்லியன் டாலா்) உள்ள நிலையில், அதில் 35 சதவீதம் வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










