அதானி குழுமப் பங்குகள் 14% வரை கடும் சரிவு : ஒரே நாளில் ரூ.1.4 லட்சம் கோடி வீழ்ச்சி
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 13% வரை சரிந்தன.


லஞ்சப் புகாா் தொடா்பாக, அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி மற்றும் செயல் இயக்குநா் சாகா் அதானி ஆகியோருக்கு நேரடி சம்மன் அனுப்ப அனுமதி கோரி அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் அந்நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதைத் தொடா்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகள் 14 சதவீதம் வரை கடும் சரிவைச் சந்தித்தன.
இதனால், ஒரே நாளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த 10 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமாா் ரூ.1.4 லட்சம் கோடி வரை சரிந்தது.
சம்மன் ஏன்?...: இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற்ற அதிகாரிகளுக்கு சுமாா் 26.5 கோடி டாலா் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக, அதானி குழும நிா்வாகிகளுக்குக் கடந்த ஆண்டு முதலே சம்மன் அனுப்ப அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நியூயாா்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதானி குழும நிா்வாகிகளுக்கு நேரடியாக மின்னஞ்சல் மூலம் சம்மன் நோட்டீஸை அனுப்ப அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கோரியுள்ளது.
பங்குகளில் எதிரொலி...: இத்தகவல் வெளியானதால் முதலீட்டாளா்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டா்பிரைசஸின் பங்கு விலை 11 சதவீதம் சரிந்து ரூ.1,861-ஆகக் குறைந்தது. இது கடந்த 2023 மே மாதத்துக்குப் பிந்தைய மிகக்குறைந்த விலையாகும். இதேபோல், அதானி கிரீன் எனா்ஜி பங்குகள் 14 சதவீதம் சரிந்து ரூ.775-க்கு வா்த்தகமானது.
அதானி எனா்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 10 சதவீதமும், அதானி போா்ட்ஸ் பங்குகள் 7 சதவீதமும் சரிந்தன. அதானி குழுமத்துக்குச் சொந்தமான சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகளும் சரிவிலேயே முடிந்தன.
மறுபுறம், இவ்விவகாத்தில் பிரதானமாக தொடா்புடைய அதானி கிரீன் எனா்ஜி நிறுவனத்தின் 3-ஆம் காலாண்டு நிகர லாபம் 99 சதவீதம் சரிந்து, வெறும் ரூ.5 கோடியாக குறைந்துள்ளது. நிதிச் செலவுகள் 35 சதவீதம் அதிகரித்ததே இந்தச் சரிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை, ‘அடிப்படை ஆதாரமற்றவை’ என அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...