உயர்வுக்கு வழி வகுக்கும் உயிரி எரிபொருள்!
வாழ்வில் ஒருமுறையாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இப்போதும் நீடித்து வருகிறது!


வாழ்வில் ஒருமுறையாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இப்போதும் நீடித்து வருகிறது! எனினும், 2025-ஆம் ஆண்டு சந்தை மதிப்பில் உலகின் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவே நமது நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகிறது.
பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிதி நெருக்கடியில் சிக்கி மூச்சைப் பிடித்துக் கொண்டு "பறந்து' வரும் நிலையில், பல தனியார் விமான நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் கோலோச்சி வருகின்றன. விமானப் போக்குவரத்துத் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் விமான நிறுவனங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் விமான நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பது "பயோ ஃபியூயல்' எனப்படும் உயிரி எரிபொருள்.
இந்தியாவில் கடந்த வாரம் வழக்கமான விமான எரிபொருளுடன் 25 சதவீதம் உயிரி எரிபொருளை கலந்து விமானத்தை இயக்கி நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த நிகழ்வு நமது நாட்டின் விமான எரிபொருள் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட விமான எரிபொருளுடன் ஒப்பிடும்போது, உயிரி எரிபொருளுக்கான உற்பத்திச் செலவு சற்று குறைவு. மேலும், உள்நாட்டிலேயே இவற்றை தயாரிக்க முடியும் என்பதால் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் பணம் பெருமளவில் குறையும். பெட்ரோலியப் பொருள்களுக்கு இறக்குமதியை பெருமளவில் சார்ந்து இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உயிரி எரிபொருள் என்பது வாராது வந்த மா "திரவம்'.
இது தவிர உயிரி எரிபொருளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் கட்டுப்படுத்தப்படும். "ஜம்போ ஜெட்' என்று அழைக்கப்படும் போயிங் 747 ரக விமானம் ஒரு விநாடிக்கு 4 லிட்டர் எரிபொருளைக் குடித்துதான் பறக்கிறது. அதன் மூலம் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு விமானமும் எந்த அளவுக்கு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
விமானப் போக்குவரத்து துறையில் உயிரி எரிபொருள் பயன்பாடு அடுத்தடுத்த கட்டங்களை எட்டும்போது பல்வேறு பலன்கள் கிடைக்கும். முதல் கட்டமாக, விமானத்தை இயக்குவதற்கான செலவு 15 முதல் 20 சதவீதம் வரை குறையும். உயிரி எரிபொருள் பயன்பாடு தொழில்நுட்ப ரீதியில் மேம்படும்போது, அதன் விளைவாகப் பயணிகளுக்கான விமானக் கட்டணம் குறையும்.
இந்தியாவில் விமானத்தில் பரிசோதனை செய்யப்பட்ட உயிரி எரிபொருள் காட்டாமணக்கு எண்ணெய் இருந்து தயாரிக்கப்பட்டது. முதல் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட 430 லிட்டர் எரிபொருளை தயாரிக்க 4 நாள்கள் ஆனது. ஒரு லிட்டர் உயிரி எரிபொருளை தயாரிக்க ரூ.43 முதல் ரூ.48 வரை செலவாகியுள்ளது. காட்டாமணக்கின் தரமும் உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு மிகவும் முக்கியம். தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயில் இருந்து பெறப்படும் விமான எரிபொருள் இந்தியாவில் ஒரு லிட்டர் ரூ. 48 முதல் ரூ.52 வரை உள்ளது.
இப்போது பயன்பாட்டில் உள்ள விமான எரிபொருளுக்கும், உயிரி எரிபொருளுக்கும் குறைந்த அளவே விலை வேறுபாடு உள்ளது. இன்றைய நிலையில், உயிரி எரிபொருள் தயாரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பெரிய அளவில் முதலீடும் தேவைப்படுகிறது. இதுவே உயிரி எரிபொருள் உற்பத்தி முழு வீச்சில் மேற்கொள்ளப்படாததற்கு காரணம். எனினும், உயிரி எரிபொருள் தயாரிப்பை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தும்போது அதன் விலை கணிசமாக குறைய வாய்ப்புகள் உள்ளன.
உயிரி எரிபொருள் புதிதல்ல...
விமான எரிபொருளில் மட்டுமல்லாது, கார் முதல் கப்பல் வரை பெட்ரோலியப் பொருள்களை பயன்படுத்தி இயக்கப்படும் எல்லாவற்றிலும் எத்தனால், பயோ டீசல் உள்ளிட்ட உயிரி எரிபொருள் பயன்பாட்டை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உயிரி எரிபொருள் என்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல!
அமெரிக்காவின் பிரபல ஃபோர்டு மோட்டார் நிறுவனர் ஹென்றி போர்டு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உயிரி எரிபொருளை தனது ஆலையில் தயாரிக்கப்பட்ட கார்களில் பயன்படுத்தியுள்ளார். 1908 முதல் 1927-ஆம் ஆண்டு வரை ஃபோர்டு நிறுவனம் தயாரித்த "டி' மாடல் கார்களில் எத்தனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க காலத்தில் டீசல் என்ஜின்கள், வேர்கடலையில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் கலந்து இயக்கும் வகையில் இருந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில், பல நாடுகளில் பெட்ரோலியப் படிமங்கள் அதிக அளவு இருப்பது கண்டறியப்பட்டது. உயிரி எரிபொருள் தயாரிப்பு செலவைவிட, பெட்ரோலிய படிமங்களில் இருந்து எரிபொருள் எடுப்பதற்கான செலவு குறைவாக இருந்ததால், உயிரி எரிபொருள் தயாரிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆனால், இப்போது பெட்ரோலியப் பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருவது, சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வு ஆகியவற்றால், உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு பல நாடுகள் உயிர் கொடுத்து வருகின்றன.
சோதனை முயற்சிகள்
2011-ஆம் ஆண்டு முதல்முறையாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுகில் இருந்து எடுக்கப்பட்ட உயிரி எரிபொருளை பயன்படுத்தி விமானத்தை இயக்கியது. அப்போது 10 சதவீதம் அளவுக்கு உயிரி எரிபொருள் கலக்கப்பட்டது. அந்த விமானம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பறந்தது. அப்போது, கரியமில வாயு வெளியேற்றம் வழக்கத்தைவிட 8 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக கணக்கிடப்பட்டது.
இதற்கு அடுத்து 2013-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் டச்சு ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து 6 மாதத்துக்கு வாரம் ஒருமுறை நியூயார்க்கில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்தில் உயிரி எரிபொருளை பயன்படுத்தியது.
இந்த ஆண்டு ஜனவரியில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு உயிரி எரிபொருள் கலந்து விமானத்தை வெற்றிகரமாக இயக்கியது.
அமெரிக்காவின் யுனைட்டெட் விமான நிறுவனம் 2016-ஆம் ஆண்டு முதல் தனது விமான சேவைகளில் 30% அளவுக்கு உயிரி எரிபொருளைக் கலந்து பயன்படுத்தி வருகிறது.
ஜெர்மனியின் லுஃப்தான்ஸா விமான நிறுவனமும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்துகிறது. வேளாண் கழிவு, உணவு அல்லாத எண்ணெய் ஆகியவற்றாலான உயிரி எரிபொருளைப் பயன்படுத்துகிறது.
தற்போது இந்தியாவில் முதல்முறையாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உயிரி எரிபொருளை பயன்படுத்தி விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இது இந்திய விமானத் துறைக்கு பெருமையளிக்கும் விஷயம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வழக்கமான விமான எரிபொருளுடன் 25% உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட இந்த விமானம், டேராடூனில் இருந்து தில்லிக்கு சுமார் 40 நிமிஷத்தில் சென்றடைந்தது. மத்திய அமைச்சர்கள் கட்கரி, சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், ஹர்ஷ்வர்த்தன், ஜெயந்த் சின்ஹா ஆகியோர் புது தில்லி விமான நிலையம் வந்து, ஸ்பைஸ்ஜெட் விமானத்தை வரவேற்று, இந்த சாதனையைப் பாராட்டினர். இதன் மூலம் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது தெரியவந்துள்ளது.
இந்த சோதனைகள் அனைத்திலும் சில முக்கிய விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, உயிரி எரிபொருளை கலந்து பயன்படுத்துவதன் மூலம் விமானத்தை இயக்குவதற்கு தேவையான அளவுக்கு எரிதிறனை உருவாக்க முடியும். இரண்டாவதாக உயிரி எரிபொருள் கலப்பதன் மூலம் விமான என்ஜினில் வழக்கமாக ஏற்படுவதைவிட வெப்பம் குறைவாக உள்ளது. மூன்றாவதாக இப்போது பயன்பாட்டில் உள்ள கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு உயிரி எரிபொருள் சிறந்த மாற்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தியாவின் உயிரி எரிபொருள் கொள்கை
உலகம் முழுவதிலுமே உயிரி எரிபொருள் குறித்த ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதையடுத்து, இந்தியாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, "உயிரி எரிபொருள் தேசிய கொள்கை-2018'-க்கு கடந்த மே மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை கரும்புச் சக்கையில் இருந்து மட்டுமே எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருள் தயாரிக்கலாம் என்ற கொள்கை தளர்த்தப்பட்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இனிப்புச் சோளம் போன்ற சர்க்கரை நிறைந்த பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்ற பொருள்கள், மனித நுகர்வுக்கு பயன்படாத கோதுமை, அரிசி குருணை போன்ற உணவு தானியங்கள், அழுகிய உருளைக் கிழங்கு, சமையலுக்குப் பயன்படுத்தாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், குறுகிய கால பயிர்கள் போன்றவற்றில் இருந்தும் உயிரி எரிபொருள் தயாரிக்க இந்தக் கொள்கை வகை செய்கிறது.
அந்த வகையில் கிடைக்கும் உயிரி எரிபொருளை விமான எரிபொருளில் மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசலுடனும் கலந்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் எரிபொருள் தேவை சுயசார்பை நோக்கி நகர்வதுடன், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் அரசின் கொள்கையும் வெற்றியடையும்; கிராமப் புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மேலும் உத்வேகம் பெறும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. உயிரி எரிபொருள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மேலும் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் தனியார் முதலீட்டுக்கு உள்ள தடைகளும் நீக்கப்பட்டால், உயிரி எரிபொருள் தயாரிப்பில் இந்தியா சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...