ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நலிவடைந்து வரும் கூடை முடையும் தொழில்

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மூங்கில் நார்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கூடைகளை வாங்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலிவடைந்துள்ளனர்.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:28 am

சி.ராஜசேகரன்

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மூங்கில் நார்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கூடைகளை வாங்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலிவடைந்துள்ளனர்.

மனிதர்கள் தங்களது பொருள்களை பாதுகாத்து வைக்கவும், வேறு இடத்துக்கு கொண்டு செல்லவும் கூடைகள் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மூங்கில், பனை ஓலை, பிரம்பு உள்ளிட்டவற்றின் நார்கள் மற்றும் ஓலைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கூடைகள் மனிதர்களுக்குப் பேருதவியாக இருந்தன. குறிப்பாக, விவசாயப் பயன்பாட்டுக்கு மூங்கிலால் ஆன கூடைகள் பெரிதும் உதவி புரிந்தன. நெல் எடுத்துச் செல்லவும், சாணம் அப்புறப்படுத்தவும், விதை தெளிக்கவும் கூடைகள்தான் பயன்படுத்தப்பட்டன.

விவசாயத்துக்கு மட்டுமின்றி சாதம் வடிக்க, மீன் பிடிக்க, கோழியை பாதுகாக்க, பழந்துணிகளை வைக்க என பல்வேறு வீட்டு உபயோகங்களுக்கு மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதும் கூட கிராமங்களில் நடைபெறும் திருமணங்களில் சாதத்தை வடிகட்ட மூங்கில் கூடைகளே பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டங்களில் கூடை முடைவோர் விரவி காணப்படுகின்றனர். கீழ்வேளூர், அகரக்கடம்பனூர், தேவூர், மன்னார்குடி, லெட்சுமாங்குடி, நன்னிலம், மயிலாடுதுறை, பேரளம் உள்ளிட்ட இடங்களில் கூடை முடையும் தொழில் இன்றும் நடைபெற்று வருகிறது.

குறவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வெங்காயக் கூடை, வெட்டுக் கூடை, கோழிக்கூடை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கூடைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மூங்கில் கூடைகள் செய்ய கூட்டுக்கழி மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டு மூங்கில்கள் என அழைக்கப்படும் இவற்றை மொத்தமாக விலை பேசியோ அல்லது தனியாகவோ வாங்கிக் கொள்கின்றனர். தனியாக வாங்கினால் ஒரு மூங்கிலின் விலை ரூ. 200. இந்த மூங்கில் 2 நாள் முதல் 5 நாள்கள் வரை வெயிலில் காய வைக்கப்படுகிறது. பின்னர் அவை நார்களாக நீளவாக்கில் பிளக்கப்படுகிறது. இந்த நார்களை குறுக்கும், நெடுக்குமாகப் பின்னி கூடைகள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக கூடைகள் செய்து முடிக்க 3 நாள்கள் வரை ஆகும். கூடைகள் செய்து முடித்த பிறகு, தயாரிப்பாளர்களே சுமந்து சென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

ரூ. 200-க்கு வாங்கப்படும் ஒரு மூங்கிலில் இருந்து சாதம் வடிக்கப் பயன்படுத்தும் 3 கூடைகள் செய்யலாம். இந்தக் கூடைகள் ரூ. 75-லிருந்து 100 வரை விற்பனையாகிறது. மூங்கிலின் விலை தவிர அதனைப் பிளக்க மற்றும் கூடையை வடிவமைக்கும் ஆள்களின் வருமானத்தைச் சேர்க்கும்போது நஷ்டத்தையே தருவதாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கூடைகள் ரூ. 120-லிருந்து ரூ. 150 வரை விற்பனையாகின. தற்போது ரூ. 75 -லிருந்து ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு, விலையானது இறங்குமுகத்தை நோக்கிச் சென்றுவிட்டது.

முன்னர், கூடைகள் விற்பனையால் மாதத்துக்கு ரூ. 2000-லிருந்து ரூ. 3000 வரை லாபம் கிடைத்து வந்தது. தற்போது ரூ. 500-தான் கிடைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தில் முக்கிய பங்கு வகித்த மூங்கில் கூடைகளின் பயன்பாடு, பிளாஸ்டிக், அலுமினிய பாத்திரங்கள் வருகையால் குறைந்து வருகிறது. மூங்கில் கூடைகளை நல்ல நிலையில் வைத்திருந்தால் அதிகபட்சமாக ஓராண்டு வரை பயன்படுத்தலாம். அதேநேரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்ற பாத்திரங்களை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதன் காரணமாகவும் மூங்கில் கூடைகளின் பயன்பாடு வழக்கொழிந்து வருகிறது. அத்துடன் கூடை முடையும் தொழில் முடங்கும் நிலையை நோக்கிச் செல்கிறது.

கூடைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில், துன்பங்களும், வேதனைகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. வெறுமை மட்டுமே நிறைந்து காணப்படும் கூடையினுள் சந்தோஷ மலர்களை அரசு நிரப்புமா என கேட்கிறது அவர்களின் ஈரம் காய்ந்த விழிப்பார்வை.

வங்கிகளின் உதவி தேவை

கூடை முடையும் தொழில் செய்து வரும் அகரகடம்பனூர் செல்வம், கீழ்வேளூர் காசிநாதன் ஆகியோர் கூறியது: சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொழில் செய்து வருகிறோம். நாகப்பட்டினத்தில் வெங்காய ஏற்றுமதி நிறுவனம் இருந்தபோது வெங்காய கூடைகளின் தேவை அதிகமாக இருந்தது. எங்களைத் தேடி வந்து கூடைகள் வாங்கினர். ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டவுடன் சாதாரண மக்களை நம்பியே வியாபாரம் செய்தோம்.

ஆனால், தற்போது மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தும் மக்கள் குறைந்துவிட்டனர். எனவே, நாங்கள் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வதைக் குறைத்துவிட்டோம். அத்துடன் மூலப் பொருள்களின் விலை, தயாரிப்புக்கான செலவு இவைகளுடன் ஒப்பிடும்போது உரிய விலை கிடைப்பதில்லை. வங்கிகளில் சென்று கடன் கேட்டாலும், கொடுக்க மறுக்கின்றனர். இதனால் எங்கள் பிள்ளைகளை மேல்படிப்பில் படிக்க வைக்க வழியில்லாமல் வறுமையிலேயே வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களுக்கென தனி வாரியம் அமைத்து எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட அரசு உதவ வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.