தீவன விலையேற்றத்தால் மூடப்படும் கோழிப் பண்ணைகள்
தீவன விலையேற்றத்தால் பண்ணைகளை மூடும் நிலைக்கு கோழிப் பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


தீவன விலையேற்றத்தால் பண்ணைகளை மூடும் நிலைக்கு கோழிப் பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உற்பத்திச் செலவுக்கு இணையாகக் கூட முட்டைக்கு விலை கிடைக்காததால், நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 100 கோழிப் பண்ணைகள் மூடப்பட்டு விட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
குடிசைத் தொழிலாக தொடங்கி வளர்ச்சி: தற்போது நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாளுக்கு 3.5 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் ஹைதராபாதுக்கு அடுத்ததாக, நாமக்கல் மண்டலம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கோழிப் பண்ணைகளின் வீழ்ச்சி: 2013-ல் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக பறவைக் காய்ச்சல் அச்சம், தீவனப் பொருள்களின் விலை உயர்வு, ஏற்றுமதி சரிவு போன்ற காரணங்களால் கோழிப்பண்ணை தொழில் வீழ்ச்சி அடைந்து, முட்டையினக் கோழிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
தீவன மூலப் பொருள்களின் விலை உயர்வு, கூலி ஆள்கள் பற்றாக்குறை, ஏற்றுமதி பாதிப்பு போன்றவற்றால் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வந்ததால், குஞ்சுகள் விடுவதை குறைத்துக் கொண்டதே, பண்ணைகளில் கோழிகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் என்கின்றனர் கோழிப் பண்ணையாளர்கள்.
நஷ்டத்துக்கு முட்டை விற்பனை: உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைவான விலையில் முட்டை விற்கப்படுவதால் பண்ணையாளர்கள் தொடர் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். பண்ணையாளர்கள் மதிப்பின்படி முட்டை ரூ.3.50-க்கு கீழே விற்கப்படுமாயின், அது நஷ்டம்தான்.
கடந்த 3 ஆண்டுகளாக, முட்டையின் சராசரி விலை ரூ.2.50 முதல் ரூ.3 வரை மட்டுமே இருந்துவந்துள்ளது. தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், உற்பத்திச் செலவை விட சராசரியாக 30 காசு வரை முட்டை விலை குறைவாக உள்ளதால் ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் 100 கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக விலை வீழ்ச்சி தொடர்வதால், ரூ.1,000 கோடி அளவுக்கு பண்ணையாளர்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் பண்ணைகள் தொடர்ந்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதியைப் பாதிக்கும் பறவைக் காய்ச்சல் பீதி: முட்டை ஏற்றுமதியில் இந்திய அளவில் நாமக்கல் மண்டலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 90% முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன.
ஆனால், இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் விட்டுவிட்டு வரும் பறவைக் காய்ச்சல் நோய் காரணமாக வெளிநாடுகள், குறிப்பாக, நாமக்கல் மண்டத்தில் இருந்து முட்டை ஏற்றுமதியாகும் அவ்வப்போது இந்திய முட்டைக்குத் தடை விதித்து வருகின்றன. இதனால் உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுக்கு மிக குறைவான முட்டைகள் மட்டுமே நாமக்கல் மண்டலத்தில் இருந்து தற்போது ஏற்றுமதியாகி வருகிறது.
தமிழகத்தில் பொதுவாக நிலவும் தட்பவெப்ப நிலையால், பறவைக் காய்ச்சலைப் பரப்பும் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்து வந்தாலும், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஏற்படும் பறவைக் காய்ச்சல் நோயின் தாக்கம், முட்டை ஏற்றுமதியை பாதித்துவிடுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் முட்டை ஏற்றுமதி சரிந்தது.
தீவன விலையேற்றம்: முட்டைக் கோழிப் பண்ணையாளர்களுக்கு தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்னை தீவன விலையேற்றம். கடந்த 3 ஆண்டுகளில் தீவன விலை 200% வரை உயர்ந்துள்ளது. தீவனங்கள், மருந்துகள் விலை 50 சதவீதம் உயர்ந்தால் முட்டை விலை 5% தான் உயருகிறது.
கோழித் தீவனத்தில் மிக முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளம், 50% தீவனம் தயாரிக்கத் தேவைப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 25,000 டன் மக்காச்சோளம் நாடு முழுவதும் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது நிலவிவரும் மக்காச்சோளத்தின் பற்றாக்குறையால், அதன் விலை மிகவும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 1 கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
உற்பத்தி குறையும்போது, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் அரசு செய்வதுபோல், தமிழக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து சேமிப்பதில்லை என்கின்றனர் பண்ணையாளர்கள்.
மக்காச்சோளம் பதுக்கல்: பெரிய வியாபாரிகள் மக்காச்சோளத்தை ஏகபோகமாக கொள்முதல் செய்து கிடங்குகளில் சேமித்து வைத்து, தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் தினமும் விலையை உயர்த்தி வருகின்றனர் என்கிற புகார் உள்ளது.
இதனால் வியாபாரிகளுக்குதான் லாபமே தவிர, விவசாயிகளுக்கு அல்ல. முட்டைப் பண்ணையாளர்கள் இந்த விலை உயர்வைச் சந்திக்க முடியாமல் 5 சதவீத பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், மேலும் பண்ணைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியன் தெரிவித்தது: பருவமழை பெய்து, பயிர் செய்யத் தொடங்கினால் கூட அதனால் உடனடியாக தொழிலைக் காப்பாற்ற முடியாது. எனவே, மக்காச்சோளம் இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து மக்காச் சோளத்தை வரி இல்லாமல் இறக்குமதி செய்து, பற்றாக்குறையைப் போக்க முன்வர வேண்டும். மேலும், இறக்குமதி செய்ய விரும்பும் தனிப்பட்ட நபர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாடு முழுவதும் அரசே மக்காச்சோளத்தை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்தால், விலை ஏற்றத்தை தடுக்க முடியும். பண்ணையாளர்களின் இந்தக் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு, கோழிப் பண்ணைத் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொழில் அடையாளம் காப்பாற்றப்படுமா?: நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாக கருதப்படும் கோழிப் பண்ணை தொழில், இப்போது பல்வேறு காரணங்களால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கால் நூற்றாண்டுக்கு மேல் இத் தொழில் நடைபெற்றுவரும் நிலையில், குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையினரும் இந்த தொழிலுக்கு வந்துவிட்டனர்.
சுமார் 1,000 பண்ணையாளர்கள் மட்டுமல்லாமல், இத் தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாக உள்ள கோழிப் பண்ணைத் தொழிலைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர் கோழிப் பண்ணையாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...