/

கைவிடப்பட்டதா நெசவுப் பூங்கா திட்டம்?

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் தொடங்கப்பட்ட வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:28 am

எஸ். பாண்டி

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் தொடங்கப்பட்ட வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், எஸ்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் கைத்தறி, விசைத்தறித் தொழிலை நம்பி சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, அப்போதைய ஆண்டிப்பட்டி எம்எல்ஏவும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அந்தப் பகுதியில் நெசவுத் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து, டி.சுப்புலாபுரம் அருகே சுமார் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2004}ஆம் ஆண்டில் நெசவுப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட நெசவுக் கூடங்கள், சைசிங், வார்ப்பிங் யூனிட் அமைக்கத் திட்டமிடப்பட்டு முதல் கட்டப் பணிகள் நடைபெற்றன.

இதற்கு தமிழக அரசு ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல, மத்திய அரசு தனது பங்களிப்பாக ரூ. 2.10 கோடி வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் பங்குத்தொகையாக ரூ.3 கோடி பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ. 5.10 கோடி நிதியில் கட்டட வேலைகள் தொடங்கப்பட்டன.

மீதித் தொகைக்கு வங்கிகளில் கடன் கோரி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், எந்த வங்கியும் கடன் வழங்க முன்வரவில்லை. இதனால், பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

மேலும், கடந்த 12 ஆண்டுகளில் மத்திய, மாநில அமைச்சர்கள் பல முறை இந்தப் பூங்கா அமையும் இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதலீட்டாளர்களுக்கு நிதி உதவி பெற தமிழக அரசும், இந்தத் தொகுதி எம்எல்ஏவும், எம்பியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கைத்தறித் துறை உதவி இயக்குநர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது: வைகை உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இல்லை. அதனால் முடங்கிக் கிடக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள மானியத் தொகையை ஒப்படைக்க முதலீட்டாளர்கள் ஒப்புக் கொண்டதால், இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

வைகை உயர் தொழில்நூட்ப நெசவுப் பூங்கா இயக்குநர் ராமமூர்த்தி தெரிவித்ததாவது: மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் முதலீட்டாளர்கள் பங்குத் தொகையின் மூலம் பணிகள் நடைபெற்றன. வங்கிகள் நிதியுதவி வழங்க மறுத்து வருவதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகள் நிதி உதவி வழங்கினால் விரைவில் பணிகள் நடைபெறும். இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக 3,000 பேரும், மறைமுகமாக 5,000 நெசவுத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.