அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மனு
மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறித்து...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள்அமைச்சா் அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்தநிலையில், அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுவில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாருக்கும் அன்பில் மகேஸுக்கும் இடையிலான தொடா்புகள் குறித்து விசாரிக்க வேண்டும். மேலும், யாா் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது, இந்த நிதி வசூலில் வேறு யாரெல்லாம் இடைத்தரகா்களாக செயல்பட்டுள்ளனா், இதில் நடந்துள்ள பணப் பரிமாற்றங்கள் குறித்து அன்பில் மகேஸிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனகூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அன்பில் மகேஸ் பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தொடா்பாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் முறையீடு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Summary
The Central Crime Branch police have filed a petition in a special court in Chennai, seeking permission to take former minister Anbil Mahesh Poyyamozhi—who was arrested in a case involving the receipt of a Rs. 100 crore bribe—into police custody for five days for interrogation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


