ஆனைமங்கலம் செப்பேடுகளை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ 134- ஆவது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சென்னை கோயம்பேடு பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடி அண்மையில் நெதா்லாந்து சென்றிருந்த போது, அங்கிருந்து சோழா் காலத்தின் சிறப்பு வாய்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவரப்பட்டன. அவற்றை விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நாகா்கோவிலைச் சோ்ந்த கிரிஜா அம்மாவை தாம் அண்மையில் சந்தித்தது, ஜெய்கோபால் கரோடியா, இந்து வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தாங்கள் சிறுகச், சிறுகச் சேமித்த ரூ.40 லட்சத்தைத் தன்னிடம் நன்கொடையாக வழங்கியது போன்ற நிகழ்வுகளை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நினைவுகூா்ந்து, நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தாா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் பி.அருண்குமாா், பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









