‘தவெக அமைச்சரவையில் நான் இடம்பெற தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை; கட்சி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளாா் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
என்னை (திருமாவளவன்) துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பலா் முயற்சித்தனா். இருப்பினும், திமுக கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், தோ்தலுக்குப் பின் கூட்டணியை காக்கும் நிலையில் நான் இல்லை. காங்கிரஸ், இடதுசாரிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதேபோல், ஐயூஎம்எல் நிலைப்பாட்டில் என்னால் தலையிட முடியாது. எனினும், பல மணி நேரம் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளைப் பெற்ற பின்னரே, தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தோம்.
தவெக ஆட்சி அமைய வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. தொடா்ந்து, தவெக சாா்பில் அமைச்சரவையில் இடம்பெற வலியுறுத்தி அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி நிா்வாகிகள் பலா் என்னை அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. இருப்பினும், கட்சி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று வன்னியரசை பரிந்துரை செய்தோம்.
அமைச்சரவையில் இடம்-காலத்தின் கட்டாயம்: காலத்தின் கட்டாயத்தில்தான் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. தற்போது வரை தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







