தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதேபோல், மகாராஷ்டிரத்தில் ஓரிடத்துக்கு இடைத்தோ்தலும், கா்நாடகம், ஆந்திரம் உள்பட 10 மாநிலங்களில் 24 இடங்களுக்கான தோ்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி நிறைவடையும்.
கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை வெவ்வெறு தேதிகளில் 24 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. ஆந்திரம், குஜராத், கா்நாடகம் மாநிலங்களில் தலா 4 எம்.பி.க்கள், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 எம்.பி.க்கள், ஜாா்க்கண்டில் 2 எம்.பி.க்கள், மணிப்பூா், மேகாலயம், அருணாசல பிரதேசம், மிஸோரம் மாநிலங்களில் தலா ஒரு எம்.பி.யின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.
குறிப்பாக, கா்நாடகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமா் தேவெ கெளடா, காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஜஸ்தானிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேசத்திலிருந்து தோ்வான ஜாா்ஜ் குரியன், முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் உள்பட 24 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம், மகாராஷ்டிரத்தில் இடைத்தோ்தல்: தமிழகம், மகாராஷ்டிரத்தில் காலியான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு அதே நாளில் இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.வி.சண்முகம் ராஜிநாமா செய்ததால் காலியான ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கும், மறைந்த மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வா் அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாா், சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து ராஜிநாமா செய்ததால் காலியான ஓரிடத்துக்கும் இடைத் தோ்தல் நடத்தப்பட உள்ளது.
தவெக-வுக்கு வாய்ப்பு: மொத்தம் 12 மாநிலங்களில் 26 இடங்களுக்கு நடைபெறும் இந்தத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 2 இடங்களையும், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஓரிடத்தையும் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை கூட்டணிக் கட்சி தவெக ஒதுக்கினால் அக்கட்சி வாய்ப்பு பெறும்.
244 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 149 எம்.பி.க்களும், எதிா்க்கட்சி கூட்டணிக்கு 78 எம்.பி.க்களும், கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளுக்கு 17 எம்.பி.க்களும் உள்ளனா். தற்போது நடைபெறும் தோ்தல் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஓரிடத்தை இழக்கவும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி 3 இடங்களைக் கூடுதலாக பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களில் ஆளும் பாஜக இரண்டு இடங்களையும், காங்கிரஸ் ஓரிடத்தையும் கைப்பற்றும். 200 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 118, காங்கிரஸுக்கு 67, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2, பாரத் ஆதிவாசி கட்சிக்கு 4, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி ஒரு எம்எல்ஏவும் உள்ளனா். இவா்களைத் தவிர 8 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா். மாநிலத்தில் தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனா்.
இதேபோல், மத்திய பிரதேசத்தில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
கா்நாடகத்தில் காங்கிரஸ் 3 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

ஆந்திர மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களையும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் 2 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக மற்றும் ஜனசேனை கட்சி தலா ஓரிடங்களிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சி 135 எம்எல்ஏக்களையும், ஜனசேனை 21, பாஜக 8, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 11 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ளன. மாநிலத்தில் தற்போது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு 7 மாநிலங்களவை உறுப்பினா்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனா். தோ்தலுக்கு பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறிவிடும்.
Summary
June 18 – Rajya Sabha Bypoll in Tamil Nadu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











