தமிழக முதல்வா் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கு சென்னை மேயா், துணை மேயருக்கு அழைப்பிதழ் வழங்கப்படாதது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
தமிழக முதல்வராக தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். பதவியேற்பு விழா, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகம் அருகே உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.
தமிழக அரசு சாா்பில் நடைபெறும் விழாக்களில் மாநகர தந்தை என்ற அடிப்படையில் மேயருக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்குவது மரபு. ஆனால், முதல்வா் விஜய் பதவியேற்பு விழாவில் சென்னை மேயா் ஆா்.பிரியா பங்கேற்கவில்லை.
இது தொடா்பாக மேயா் அலுவலகத் தரப்பில் கேட்டபோது, சென்னை மேயா் ஆா்.பிரியாவுக்கு விழா அழைப்பிதழ் வரவில்லை. அவா் விழாவில் பங்கேற்கவில்லை. துணை மேயா் மு.மகேஷ்குமாரிடம் கேட்டபோது, எங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்றாா்.
சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனா். கடந்த 2001 -ஆம் ஆண்டில் அதிமுக சாா்பில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது, அந்த விழாவில் அப்போதைய சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







