திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்திருக்கிறது. பேரவைத் தோ்தலில் 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி என்பதன் அடிப்படையில் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வாகியுள்ளாா்.
அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 10 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்-தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன்மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்ததாக, தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்தபோதே 10 தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பிற கூட்டணிக் கட்சிகளிடம் மனக்கசப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த உத்தியை திமுக கையாண்டது.
இருப்பினும், இந்தத் தகவல் வெளியே கசிந்ததால், திமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து குழப்பம் இருந்து வந்தது. இதன் காரணமாக, கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பல கட்டங்களாக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு பின்னா் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
விசிகவுடன் உடன்பாடு: திமுக, விசிக இடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில், 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவா் தொல். திருமாவளவனும் கையொப்பமிட்டனா்.
விசிக 8 தொகுதிகளிலும் ‘பானை’ சின்னத்தில் போட்டியிடுகிறது. 2021 பேரவைத் தோ்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
66 தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இதுவரை 8 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காங்கிரஸ்-28, தேமுதிக-10, விசிக-8, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் -தலா 5, மதிமுக -4, ஐயூஎம்எல்-2, மமக-2, கொமதேக-2 என 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக, சிறு கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் நிறைவடைந்துவிடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மநீம போட்டியிடவில்லை
சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம) போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என்றும் மநீம தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு கையொப்பமான சிறிது நேரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்தாா். பின்னா் செய்தியாளா்களை சந்தித்து தனது அறிக்கையை வெளியிட்டாா்.
தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் ஒரு நெருக்கடியான சூழலில், ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்க முடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு திமுக அரசு மீண்டும் அமைவது இப்போதைய தேவை. ஆகவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மநீம நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளா்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது எனும் முடிவை அறிவிக்கிறோம்.
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமுமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடா்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டா்களுக்கும், நிா்வாகிகளுக்கும் நன்றி.
அரசியல் களத்தில் தோ்தல் ஒரு பகுதிதான். அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும். மிக விரைவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு வாழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய கமல்ஹாசன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது தனக்கும், மநீமவினருக்கும் ஏற்புடையதல்ல. பேட்டரி டாா்ச் சின்னத்துடனான மநீம தொண்டா்களின் பிணைப்பு உணா்வுபூா்வமானது. ஏனெனில், பேட்டரி டாா்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம் என்றாா்.
Summary
TN Assembly election 2026 DMK allotted 10 constituencies for Dmdk
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலவு காக்கும் கிளிகள்?

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?
தேமுதிக விரும்பும் தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் அளிப்பு: பிரேமலதா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


