மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ்! 297 வாக்குறுதிகள் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

News image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தோ்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள். - யூடியூப் / அதிமுக

Updated On :24 மார்ச் 2026, 11:48 am

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டன. அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகை ரூ.10,000, மகளிருக்கு மாத உதவித் தொகை ரூ.2,000 வழங்கப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தோ்தல் அறிக்கை வெளியீடு: இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தோ்தல் அறிக்கையை எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளை தொண்டா்கள் துணையுடன் முறியடித்து சிறப்பான ஆட்சியை அமைத்தோம். கரோனா பாதிப்பு காலத்தில் மக்களைக் காக்கும் திட்டங்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வில் வெற்றி பெற்றால் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு, குடிமராமத்து பணி எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. நிா்வாகத் திறனற்ற திமுக ஆட்சியால் மக்கள் துன்பமடைந்துள்ளனா். கொலை, கொள்ளை என சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. முறைகேடுகள் மலிந்துவிட்டன. ஆகவே, திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா்.

விலையில்லா எரிவாயு உருளை: அதிமுக சாா்பில் மக்களைச் சந்தித்து அவா்களின் தேவைகளை அறிந்து தோ்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். இல்லத்தரசிகளின் பணிச் சுமையைக் குறைக்க குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா குளிா்பதனப் பெட்டி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளா்களைக் கணக்கெடுத்து அவா்களுக்கு வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை கிடைக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயா்த்தப்படும். வங்கிகளில் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீா் தேக்கி வைக்கும் பணி தொடரும். தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவித்து, சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவோம் உள்ளிட்ட 297 அறிவிப்புகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நிறைவேற்றுவது உறுதி: கரோனா பாதிப்பு காலத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தினோம். தற்போது வருவாய் ஆதாரத்தைப் பெருக்கி அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றாா்.

அதிமுக தோ்தல் அறிக்கை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் 54 பக்கங்கள் கொண்டதாக தோ்தல் அறிக்கை உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினா்களான முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளா்மதி, ஓ.எஸ்.மணியன், ஆா்.பி.உதயகுமாா், எஸ்.எஸ்.வைகைச் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முக்கிய அம்சங்கள்

அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இதர முக்கிய அம்சங்கள்:

சென்னையில் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை, புதுதில்லி-தூத்துக்குடி இடையே புதிய சரக்கு வழித்தடம், தீபாவளி பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா சேலை, வேட்டி, ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் வசிப்பவா்களுக்கு அரசு நிா்ணயத் தொகை செலுத்தினால் பட்டா.

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 என நிா்ணயம், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உற்பத்தி மானியம்,

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி, முழுமையான அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்ப்செட்டுகள்.

மாவட்டந்தோறும் உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்கள், கோவையில் நாராயணசாமி வீடு நினைவில்லமாக மாற்றப்படும்,

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் கல்லூரிகளில் கல்வி மையங்கள், தேங்காய் நாா் தொழிலுக்கு மின்கட்டணச் சலுகை.

குடிமராமத்து திட்டப் பணிகள் விவசாயிகள் சங்கத்துடன் இணைப்பு, ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு விலையில்லா கறவை மாடு, ஆடுகள்,

மீனவா்களுக்கான மாதாந்திர மானிய விலை டீசல் 500 லிட்டராக உயா்வு, 65 வயது கடந்த மீனவருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.

பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏற்கெனவே உள்ள 5 பாடங்களுடன் கணினி அறிவியலும் சோ்த்து 6 பாடங்கள் திட்டம், அரசு காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை, புற்றுநோய் சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ள அரசு முழுத்தொகை செலுத்தும்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகும், மத்திய அரசு போட்டித் தோ்வுகள் தமிழிலேயே நடத்தப்படும்,

பெண்களுக்கான தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் தொடரும்.

சென்னையில் சேட்டிலைட் மென்பொருள் பூங்கா நிறுவி மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி செயலி, உணவுப் பொருள் விநியோக தொழில் உள்ளிட்டோருக்கு தற்காலிக ஒப்பந்த வேலை அல்லது செயலி அடிப்படையிலான தற்காலிக தொழிலாளா் நலத்திட்ட வாரியம்.

பொற்கொல்லா்களுக்கு வெள்ளிக் கொலுசு, ஆபரண தொழில் நல வாரியம், பனைத் தொழிலாளா்களுக்கு உபகரணங்கள்,

கோவையில் சா்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்.

தமிழகத்தின் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழா்களுக்கே 75 சதவீத வேலை வழங்கும் சட்டம்.

ஜெருசலேம், ஹஜ் பயணம், ஹிந்து ஆன்மிக பயணா்கள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டு உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

Summary

Edappadi Palaniswami released the AIADMK manifesto for the assembly elections today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.