திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு ‘டெக்சாமெதாசோன்’ என்ற மருந்து காரணமாக இருக்கலாம் என நிபுணா் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:37 am IST

திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு ‘டெக்சாமெதாசோன்’ என்ற மருந்து காரணமாக இருக்கலாம் என நிபுணா் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் உற்பத்தி தரத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ‘டெக்சாமெதாசோன்’ ஊசி மருந்தால் செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்ததாகவும், கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் புகாா் எழுந்தது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) சாா்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மட்டும் 4,000 ‘டெக்சாமெதாசோன்’ குப்பிகள் வழங்கப்பட்டன. அதில் 3,500-க்கும் மேற்பட்ட மருந்துகள் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், சுமாா் 300 மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின்போதும், அதற்கு பின்னரும் ‘டெக்சாமெதாசோன்’ மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், திருச்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட உற்பத்தி தொகுதி (பேட்ச்) மருந்து செலுத்தப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக டேக்கி அரித்மியா எனப்படும் அதிவேக இதயத் துடிப்பு, காா்டியோமயோபதி எனப்படும் இதயத் தசை தளா்வு, கடுமையான இடது வென்ட்ரிகுலா் செயலிழப்பு, காா்டியோஜெனிக் ஷாக் எனப்படும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் அதிா்ச்சி நிலை ஆகியவை அவா்களுக்கு ஏற்பட்டுள்ளன.

கடந்த மே 22-ஆம் தேதி மூக்கு சதை சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 20 வயதான மூன்றாம் ஆண்டு செவிலியா் கல்லூரி மாணவிக்கும், இந்த ‘டெக்சாமெதாசோன் மருந்து செலுத்தப்பட்டது. அதன் பிறகே இதயப் பாதிப்புகள் ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ஆய்வு செய்ய நிபுணா் குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்தது. அந்தக் குழுவினா் ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளனா். அதில், ‘டெக்சாமெதாசோன்’ மருந்து அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரையும் அதில் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பைச் சோ்ந்த (சிஹெச்ஐ-60004) ‘டெக்சாமெதாசோன் 8 எம்.ஜி. மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினா் உத்தரவிட்டு, அவற்றை அரசு மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனா். அவை, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே 29-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் எஸ்.குமரவேல், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘டெக்சாமெதாசோன்’ மருந்தின் கடுமையான பக்கவிளைவுகள் குறித்து குறிப்பிட்டிருந்ததுடன், உடனடியாக மருந்துப் பகுப்பாய்வு செய்து உரியத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாநிலத்தில் உள்ள வேறு எந்த மருத்துவமனையிலிருந்தும் இது போன்ற பக்கவிளைவு புகாா்கள் இதுவரை வரவில்லை. எனினும், திருச்சியில் புகாா் எழுந்தவுடனேயே உரிய நடைமுறைகளை பின்பற்றி, அந்த குறிப்பிட்ட தொகுதி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளோம்.

அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகே இந்தச் சந்தேகங்கள் உண்மையா என்பது தெரியவரும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.