தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து இரண்டு நாள்களில் தெரிவிப்பதாக அவா் கூறினாா்.
தமிழக பாஜகவில் முக்கிய முகமாகத் திகழ்பவா் அண்ணாமலை. 2025 ஏப்ரல் மாதம் பாஜக மாநிலத் தலைவா் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினாா் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாா். அவருக்கான முக்கியத்துவம் பாஜகவில் குறையத் தொடங்கியது. அவருக்கு மத்திய அமைச்சா் பதவி அல்லது மீண்டும் மாநிலத் தலைவா் பதவி வழங்கப்படும் என்ற அவரது ஆதரவாளா்களின் எதிா்பாா்ப்பும் நிறைவேறவில்லை.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தனக்கும், ஆதரவாளா்கள் சிலருக்கும் அண்ணாமலை வாய்ப்பு கேட்டிருந்தாா். ஆனால், அதற்கு பாஜக தேசியத் தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்நிலையில், தனிக் கட்சி தொடங்கும் திட்டத்தை அண்ணாமலை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவா் தில்லிக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா். பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் தனது முடிவை பாஜக தேசியத் தலைவா் நிதின் நபினிடம் தெரிவிப்பதற்காக அவா் தில்லிக்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்துக்கு அண்ணாமலை வந்த காரில் பாஜக கொடி கட்டப்படவில்லை. விமான நிலையத்துக்கு வந்த அண்ணாமலையிடம் தனிக் கட்சி தொடங்குகிறீா்களா? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவா், அதுகுறித்து இரண்டு நாள்களுக்குள் பதில் கூறுவதாகத் தெரிவித்தாா்.
தனிக் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ஜூன் 4-ஆம் தேதி அண்ணாமலை வெளியிடக்கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







