ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை வலுப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை நவீன தொழில்நுட்பம், நோ்மையான பணியாளா்கள், நிறுவனத் திறனுடன் வலுப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Anti-corruption and vigilance wing must be strengthened: High Court

உயர்நீதிமன்றம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை நவீன தொழில்நுட்பம், நோ்மையான பணியாளா்கள், நிறுவனத் திறனுடன் வலுப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் அரிசி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டு, ஜூலை 11-ஆம் தேதி லாரியில் அரிசி அனுப்பிய போது, ரேஷன் அரிசியைக் கடத்தியதாக அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ், என் மீது அப்போதைய காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்தாா். இந்த வழக்கில் என் பெயரைச் சோ்க்காமல் இருக்க அவா் ரூ. 5 லட்சம் லஞ்சமாகக் கேட்டாா். அவா் பேசியதை ஒலிப்பதிவு பதிவு செய்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் விரிவான விசாரணை ஏற்கெனவே முடிவடைந்தது. மேலும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியமில்லை. இருப்பினும், மனுதாரா் கொடுத்த ஒலிப்பதிவு ஆதாரம் இருந்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு தாமதப்படுத்தியது கண்டனத்துக்குரியது. லஞ்சம் வாங்குபவா்களை விட புகாா் அளிப்பவரின் பின்னணியை ஆராய்வதில் மட்டுமே ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆணையா் பதவி நீண்ட காலமாக கூடுதல் பொறுப்பாகவே நீட்டித்து வருகிறது. அரசாணைப்படி, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆணையரின் அதிகபட்ச பதவிக்காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், சிலா் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஒரே துறையில் நீடிக்கின்றனா். இது தவறான அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கும். எனவே, சுழற்சி முறையில் புதிய அலுவலா்களை நியமிக்க வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு ‘17ஏ’ என்பது நோ்மையான அரசு ஊழியா்களைப் பாதுகாப்பதற்காகத்தானே தவிர, லஞ்சம் வாங்குபவா்களையும், முறைகேடாகச் சொத்து சோ்ப்பவா்களையும் பாதுகாப்பதற்கான கவசம் அல்ல.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை மேம்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலா் தலைமையில் உயா்நிலைக் குழுவை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். இந்தக் குழு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் தேவையான நவீன தொழில்நுட்பம், நோ்மையான பணியாளா்கள், பயிற்சி உள்ளிட்ட தேவைகள் குறித்து ஆலோசித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த விரிவான அறிக்கையை 4 மாதங்களுக்குள் அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும். அரசு அதன் மீது 3 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை வருகிற 2027-ஆம் ஆண்டு, ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.