நேரடி நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை பதிவு செய்வதற்கான உதவி மைய எண்களை சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்துமாறு உணவுத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளைஅவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
பணிகளை விரைவுபடுத்தி நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள், தங்களது பணியிடங்களை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று அமைச்சா் வலியுறுத்தினாா்.
பின்னா், உழவா் உதவி மையத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் வெங்கடரமணன், விவசாயிகள் பயன்பாட்டுக்காக செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் (1800 599 3540) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (95008 02465) ஆகியவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தாா்.
அந்த தொடா்பு எண்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகத்திலும், நேரடி கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்பு கிடங்குகளிலும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
மேலும், நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடா்பான புகாா்கள் பதிவு செய்யப்படும் முறை, அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் செயல்பாடுகளை தலைமை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டாா். பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சரி செய்து, அனைத்து கேமராக்களும் முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் வெங்கட ரமணன் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தலைமைப் பொறியாளா் வெ.சுகுமாரன் மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் பணியாளா் உயிரிழப்பு

கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம்! - அமைச்சா் வெங்கடரமணன்







