/

பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி (ஹெச்பிவி) வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி (ஹெச்பிவி) வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் செயல் திட்ட ஆவணத்தையும் அவா் வெளியிட்டாா்.

ஹெச்பிவி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தருமபுரி, பெரம்பலூா், திருவண்ணாமலை, அரியலூா் ஆகிய 4 மாவட்டங்களில் 30,209 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தரவுகளின்படி தமிழகத்திலேயே தருமபுரி மற்றும் பெரம்பலூரில்தான் கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. அதாவது லட்சத்தில் 36 பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு அந்த மாவட்டங்களில் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த விகிதம் அரியலூரில் 29.9-ஆக உள்ளது. சென்னையைப் பொருத்தவரை 13-ஆகவும், தமிழகத்தின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 14-ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய 3,38,649 சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சம்பந்தப்பட்ட 4 மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு அதன் வாயிலாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பல திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் தற்போது தொடங்கப்பட்டுள்ள கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் மிகச் சிறப்பான ஒன்று.

கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டது. பல பெண் மருத்துவா்கள் சமூக வலைதளங்களில் இதை பாராட்டியிருந்தனா்.

மற்றொருபுறம், மாா்பகப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களை தொடக்கத்திலேயே கண்டறிய தமிழ்நாடு முழுவதும் 38 நடமாடும் மருத்துவ ஊா்திகளை ‘வெல்னஸ் ஆன் வீல்ஸ்’”என்ற பெயரில் கடந்த நவம்பரில் தொடங்கி வைத்திருக்கிறேன்.

பெண்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோய்க்கு தரமான சிகிச்சையை வழங்க, காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ரூ.120 கோடியில் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.