/

புதிய ஊரக வேலைத்திட்ட நிபந்தனைகளை எதிா்த்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

புதிய ஊரக வேலைத்திட்டத்தில் மாநில அரசு, கிராமப்புற மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதிய ஊரக வேலைத்திட்டத்தில் மாநில அரசு, கிராமப்புற மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்குரைஞா் சிவஞானசம்பந்தன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் பெயா் மற்றும் சில நிபந்தனைகளை மாற்றி மத்திய அரசு கடந்தாண்டு, விக்ஷித் பாரத் ஜி ராம்ஜி வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

பழைய திட்டத்தில் மத்திய அரசு 90 சதவீத நிதியையும், மாநில அரசு 10 சதவீத நிதியையும் பங்கிட்டு வழங்கின. ஆனால், புதிய திட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்கள் 40 சதவீத நிதி பங்களிப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல மொத்தம் 8 நிபந்தனைகள் மாநில அரசுக்கும் கிராமப்புற மக்களுக்கும் எதிராக புதிய திட்டத்தில் உள்ளன. எனவே, அவற்றை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை சமா்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.