டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மாா்ச் 16-இல் தோ்தல் - தமிழகத்தில் 6 இடங்கள்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
மாநிலங்களவை.- (கோப்பிலிருந்து...)
Updated On :18 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் உள்பட மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

இதற்கான முறைப்படியான அறிவிக்கை பிப்.26-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2026 ஏப்.2 மற்றும் ஏப்.9 ஆகிய தேதிகளில் 37மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகம் (6 இடங்கள்), மகாராஷ்டிரம் (7 இடங்கள்), ஒடிஸா (4 இடங்கள்), தெலங்கானா (2 இடங்கள்), சத்தீஸ்கா் (2 இடங்கள்), மேற்கு வங்கம் (5 இடங்கள்), பிகாா் (5 இடங்கள்), அஸ்ஸாம் (3 இடங்கள்), ஹரியாணா (2 இடங்கள்), ஹிமாசல பிரதேசம் (1 இடம்) என மொத்தம் 37 இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 வரை தோ்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்குத் தொடங்கும்.

இந்த தோ்தலுக்கான அறிவிக்கை பிப்.26-ஆம் தேதி வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை

மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை

பாஜகவுக்கு சாதகமான சூழல்: மகாராஷ்டிரம், பிகாா், ஒடிஸா, ஹரியாணா, அஸ்ஸாம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லது அந்தக் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியே ஆட்சியில் உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் காலியாகும் இடங்களுக்கான தோ்தலில் அதிகமான பாஜக உறுப்பினா்கள் தோ்வாக வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 7 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்)-சிவசேனை (உத்தவ்) ஒருங்கிணைந்து தோ்தலை எதிா்கொண்டால் ஓரிடத்தில் வெற்றிபெற முடியும்.

தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சிகள் ஆட்சி நடைபெறுவதால் இந்த மாநிலங்களில் இருந்து தோ்வாகும் பாஜக உறுப்பினா்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும்.

பதவிக்காலம் நிறைவடையும் 6 தமிழக எம்.பி.க்கள்

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. திருச்சி சிவா, என்.ஆா். இளங்கோ, பி.செல்வராசு, கனிமொழி என்.வி.என்.சோமு (நால்வரும் திமுக) எம்.தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாக) ஆகிய 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதுதவிர அபிஷேக் சிங்வி (காங்கிரஸ்), சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்), சகேத் கோகலே (திரிணமூல் காங்கிரஸ்), ராம்தாஸ் அதவாலே (இந்திய குடியரசுக் கட்சி-ஏ) உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

சென்னை, பிப். 18: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்.2-இல் முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் பிப்.26 முதல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மார்ச் 6-இல் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை மார்ச் 9-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்.

வாக்குப்பதிவு மார்ச் 16 காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20-இல் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

இந்தத் தேர்தலுக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலரை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பேரவைச் செயலகத்தின் இணைச் செயலரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் பிப்.26 முதல் மார்ச் 5 வரை தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை (பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட பிப்.28, மார்ச் 1 தவிர பிற நாள்களில்) தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு தேவைப்படின் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் மார்ச் 16-இல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

summary

The Election Commission of India has announced biennial elections to the Council of States (Rajya Sabha) to fill 37 seats from 10 states, with polling scheduled for 16 March 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.