டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநிலங்களவை எம்.பி.! அதிமுக ஆதரவு யாருக்கு? ஜி.கே. வாசன் Vs அன்புமணி Vs பிரேமலதா!

தமிழ்நாட்டுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புகள் பற்றி...

News image
அன்புமணி, ஜி.கே. வாசன், பிரேமலதா- ANI
Updated On :19 பிப்ரவரி 2026, 1:23 pm

எஸ். ரவிவர்மா

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான தேர்தலை அறிவித்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை சூடுபிடிக்க வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் பதவிக்காலம் முடியவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகின்ற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை எம்பிக்களான திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, பி. செல்வராசு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகவின் ஜி.கே. வாசன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால், இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது திமுகவுக்கு 133, அதிமுகவுக்கு 62, காங்கிரஸுக்கு 17, பாமக 5, பாஜக 4, விசிக 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 உறுப்பினர்கள் உள்ளனர். 5 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இதன்படி, திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்களையும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கோரி கூட்டணிக் கட்சிகள் அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவே இல்லை. இருப்பினும், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதனிடையே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதில் திமுக உறுதியாக இருக்கும்பட்சத்தில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கோர வாய்ப்புள்ளது.

திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்றாவது இடம் கனிமொழி சோமுக்கு மீண்டும் கிடைக்குமா? நான்காவது இடம் திமுகவுக்கா? காங்கிரஸுக்கா? என்பது போன்ற கேள்விகள் அலசப்படுகின்றன. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளான மார்ச் 5 ஆம் தேதிக்குள் விடைகள் தெரியவரும்.

அதிமுக வசமுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களில், ஓர் இடம் மூத்த தலைவரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான தம்பிதுரைக்கே மீண்டும் அளிக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.

இரண்டாவது இடம்தான் கூட்டணிக் கட்சிகளுக்கான ’மியூசிக் சேர்’ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

இதில், அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜி.கே. வாசனின் இடத்துக்கும் சேர்த்துதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவருக்கே எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்குவாரா?

மறுபக்கம், கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதே பாமகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதை இபிஎஸ் உறுதி செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் கடந்தாண்டு நிறைவடைந்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியிருந்த காரணத்தால் அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஆகையால், தற்போது அதிமுக ஆதரவுடன் மீண்டும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்படுவாரா?

இதனிடையே, கடந்த 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவதாக இபிஎஸ் உறுதியளித்ததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

ஆனால், 2025 மாநிலங்களவைத் தேர்தலின்போது, தேமுதிகவுக்கு இபிஎஸ் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், தற்போது வரை எந்த கட்சியுடன் கூட்டணி என்பதில் ’சஸ்பென்ஸ்’ வைத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் இணைந்து பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை பிரேமலதா மறுத்திருந்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் இடம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க பிரேமலதா முனைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவை தக்கவைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் பாஜக, அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்கு வருவதற்கு முன்னதாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கூட்டணியை இறுதி வடிவத்துக்கு கொண்டுவர பாஜகவினர் திட்டமிட்டுள்ளனராம்.

திமுகவைப் பொருத்தவரை 4 மாநிலங்களவை இடங்கள் அவர்களிடம் இருப்பதால், காங்கிரஸ் அடம்பிடிக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் பங்கு என்பதை நிராகரித்து, ஒரு மாநிலங்களவை இடத்தை கொடுத்து சலசலப்பை முடிவுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது.

அதிமுகவிடம் இருப்பது 2 மாநிலங்களவை இடங்கள். ஒன்றை வைத்துக் கொண்டு பாமக, தமாக அல்லது தேமுதிகவுக்கு மற்றொன்றை வழங்குமா? அல்லது கூட்டணியை பலப்படுத்த 2 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்குமா? அல்லது இப்போது பாரபட்சமே வேண்டாம் என இரு இடங்களையும் அதிமுகவே வைத்துக் கொண்டுவிடுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.