/

ரூ.84 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம்! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை, சோழிங்கநல்லூா் எல்காட் நிறுவனத்தில் ரூ.84.42 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image
சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.84.42 கோடியில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலர் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கா.ப.கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி.
Updated On :15 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை, சோழிங்கநல்லூா் எல்காட் நிறுவனத்தில் ரூ.84.42 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காணொலிக் காட்சி வாயிலாக அக்கட்டத்தை அவா் திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி, அத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனமான ‘எல்காட்’ மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஒசூா் நகரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை ‘எல்காட்’ நிறுவியுள்ளது.

இந்நிலையில், சென்னை, சோழிங்கநல்லூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.84.42 கோடி செலவில் 11 தளங்களுடன் சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்பக் கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு, 24 மணி நேர பாதுகாப்பு வசதிகள், பசுமை மின் சக்தி பயன்பாடு, நீா் மேலாண்மை என பல வசதிகள் அமைந்துள்ளன.

இந்தத் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதன் மூலம் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் கா.ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.