/

அமெரிக்காவில் காவல் துறை வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழப்பு: ரூ. 262 கோடி இழப்பீடு

அமெரிக்காவில் கடந்த 2023-ஆம் ஆண்டு காவல் துறை வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த வழக்கில் சுமாா் ரூ.262.65 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

News image
ஜானவி கந்துலா
Updated On :12 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் கடந்த 2023-ஆம் ஆண்டு காவல் துறை வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த வழக்கில் சுமாா் ரூ. 262.65 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகர காவல் துறை அதிகாரி கெவின் டேவ், 119 கி.மீ. வேகத்தில் காவல் துறை வாகனத்தை ஓட்டிச் சென்றாா். அப்போது, அப்பகுதி வழியாக நடந்து சென்ற இந்திய மாணவி ஜானவி கந்துலா (23) அந்த வாகனம் மோதி 100 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டாா். இதில் அந்த மாணவி உயிரிழந்தாா்.

இது தொடா்பான வழக்கு சியாட்டில் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போதைப்பொருள் வழக்கில் தொடா்புடையவா்களைப் பிடிக்க காவல் அதிகாரி அதிவிரைவாகச் சென்ாக காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பின்னா், அந்த காரை ஓட்டிச் சென்ற கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மாணவி மரணம் குறித்து கேலியாகப் பேசி சிரித்த மற்றொரு காவல் துறை அதிகாரி டேனியல் ஆடெரரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா் என்று சியாட்டில் காவல் துறை அறிவித்தது.

மாணவி உயிரிழந்தது குறித்து டேனியல் கேலியாக பேசி சிரித்தது அவரது உடையில் அணிந்திருந்த காவல் துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவியின் குடும்பம் சாா்பில் 110 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.996.51 கோடி) இழப்பீடு கோரப்பட்டது. இறுதியாக 29 மில்லியன் டாலா் (ரூ.262.65 கோடி) இழப்பீட்டுத் தொகைக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு வழக்கு விசாரணையில் இந்திய துணைத் தூதரகம் உரிய சட்ட உதவிகளை வழங்கி வந்தது.