/

சரியான நேரத்தில் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம்: அமைச்சர் எஸ். ரகுபதி

சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் எஸ். ரகுபதி - (கோப்புப்படம்)
Updated On :9 பிப்ரவரி 2026, 7:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில், தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். எப்போது குழு அமைக்க வேண்டும் என்பது எங்கள் தலைவருக்குத் தெரியும். சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம்.

கூட்டணிக் கட்சியினரை சமமாகத்தான் பாவிக்கிறோம். யாரையும் அடிமைபோல வைத்திருக்கும் பழக்கம் திமுகவில், கருணாநிதி காலத்திலும் கிடையாது, தற்போது ஸ்டாலின் காலத்திலும் கிடையாது.

இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அமெரிக்காவுக்குத்தான் நலம். நாம் நெல்லை எடுத்துப் போனால், அவர்கள் உமி எடுத்துவந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்றுதான் சொல்வார்கள். ஏற்கெனவே இருந்த 3 சதவிகித வரியை 50 சதவிகிதமாக உயர்த்திவிட்டு, இப்போது 18ஆகக் குறைத்ததாகக் கூறுவார்கள்.

அதானி, அம்பானிக்கு ஆதாயம் இருக்கும் ஒன்றைத்தான் பிரதமர் மோடி எப்போதும் செய்வார். அவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கித் தரும் முடிவுகளைத்தான் மோடி எடுப்பார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 42 சதவிகிதம் வாக்குவங்கி உருவாகியிருப்பதாக செங்கோட்டையன் கூறிவருகிறார். அவருக்கு சுற்றுப்பயணம் திட்டமிடுவதற்குதான் தெரியும். மக்களின் மனங்களை அறியத் தெரியாது. புள்ளிவிவரங்கள் எதுவும் தெரியாது. 42 சதவிகிதம் அல்ல திருப்பிப் போட்டால் 24 சதவிகிதம் கூட கிடையாது. அதற்கும் குறைவுதான்.

தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருப்பதாக கூறியிருக்கும் பாமக அன்புமணி பொருளாதார மேதையல்ல. அவருக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி தெரியாது. அவரது கருத்து ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவிலேயே சிறப்பான பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கும் மாநிலம் தமிழகம்.

பிரதமர் மோடி மலேசியா போனால் தமிழர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார். இங்கே ஒடிசா போனால், பிகார் போனால் தமிழர்களைத் திருடர்கள் என்று கூறுவார். ஆனால், தமிழக மக்களுக்குத் தெரியும். ராமனை முன்னிறுத்தி வந்தாலும், முருகனை முன்னிறுத்தி வந்தாலும் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சியின் உண்மை அவர்களுக்குப் புரியும்.

டிஎன்பிஎஸ்ஸி தேர்வைத் தவறாக நடத்த வேண்டிய தேவை எங்களுக்கு என்ன இருக்கிறது. நாங்கள் நேர்மையாகத்தான் நடத்துவோம். திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார்.

summary

When the right time comes, we will form an election negotiation committee, and Stalin will conclude the talks amicably,” said Minister S. Raghupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.