டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து : திமுக யாருக்காக இயங்குகிறது? விஜய் கேள்வி
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என விஜய் கருத்து...


டிஎன்பிஎஸ்சி 2, 2ஏ தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணி என்கிற கனவோடு டிஎன்பிஎஸ்சி 2, 2ஏ முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது?
இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்?
இன்று டிஎன்பிஎஸ்சி 2, 2ஏ தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...