
விவசாயக் குடும்ப மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து... உயர்கல்வித் துறை அறிவிப்புகள்!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கான அறிவிப்புகள் குறித்து...

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - DIPR
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டண விலக்கு அளிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று (ஆக. 24) அறிவித்தார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார்.
அதில், கல்விக் கட்டணம் ரத்து
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டண விலக்கு அளிக்கப்படும்.
திருநர் மாணாக்கர்களுக்கு நிதியுதவி
உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து வழங்கப்படும்.
பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், "பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதற்கட்டமாக நிறுவப்படும்.
செயற்கைக்கோள் வடிவமைக்க நிதி
செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டுகள்
தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை II (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆய்வகங்களுக்கு அத்தியாவசிய வசதிகள்
ஆய்வகங்களை மேம்படுத்தும் வகையில், இரசாயனப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஆய்வக நுகர்பொருட்கள், சிறிய அளவிலான பழுதுபார்ப்புகள் உள்ளிட்ட
அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 270 அரசு கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்வு
2026-2027-கல்வியாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி (Autonomous) கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். தேர்வு செய்யப்படும் 10 கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும்.
அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கான (CAS) திட்டம் செயல்படுத்தப்படும்.
தகுதியான ஆசிரியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2026 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நிதிப் பயன்கள் (Prospective Effect) செயல்படுத்தப்படும்.
6,000 உதவி பேராசிரியர்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி விரைந்து நியமிக்கப்படுவர்.
உயர்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







