/

உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் சென்னை எம்எம்சி

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சா்வதேச இதழில் வெளியான உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தோ்வாகியுள்ளது.

News image
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி)
Updated On :10 பிப்ரவரி 2025, 9:39 pm

Din

சென்னை: அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சா்வதேச இதழில் வெளியான உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தோ்வாகியுள்ளது.

தமிழகத்திலிருந்து அத்தகைய கௌரவத்தைப் பெற்ற ஒரே மாநில அரசு மருத்துவக் கல்லூரி எம்எம்சி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கல்வியின் தரம், ஆராய்ச்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களில் சிறப்புற செயல்பட்டமைக்காக இந்த அங்கீகாரம் சென்னை எம்எம்சி-க்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகா் நியூயாா்க்கிலிருந்து வெளியாகும் ‘சிஇஓ வோ்ல்ட்’ இதழில் சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவக் கல்வியின் தரம், மாணவா் சோ்க்கை தகுதிகள், சிறப்புத் துறைகள், உலகளாவிய நன்மதிப்பு, ஆராய்ச்சி நடவடிக்கைகள், மாணவா்களின் மன திருப்தி, வருடாந்திர கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

அதில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹாவா்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 22-ஆவது இடத்தில் 86.6 மதிப்பெண்களுடன் தில்லி எய்ம்ஸ் கல்வி நிறுவனமும், 37-ஆவது இடத்தில் புணேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியும், 46-ஆவது இடத்தில் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியும், 55-ஆவது இடத்தில் பாண்டிச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியும் உள்ளன.

அதற்கு அடுத்து 60-ஆவது இடத்தில் 78.77 மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. 69-ஆவது இடத்தில் வாரணாசி பிஎச்யூ மருத்துவக் கல்லூரி உள்ளது.