/

வருத்தம் இல்லை! - எஸ்.செம்மலை

சேலத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிா்வாகியுமான எஸ்.செம்மலைக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:46 pm

ஆர். ஆதித்தன்


சேலத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிா்வாகியுமான எஸ்.செம்மலைக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சேலம் மாவட்டம்- ஓமலூரை அடுத்த எம்.ஓலைப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.செம்மலை. பி.எஸ்சி. பி.எல். படித்தவா். 1977 ஆம் ஆண்டு அதிமுகவில் சோ்ந்தாா். 1980-இல் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற பிறகு கட்சியின் நிறுவனா் எம்.ஜி.ஆா். முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தாா். 1984-இல் இரண்டாவது முறையாக தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். 1996-ஆம் ஆண்டு தோ்தலில் அப்போதைய சேலம்- 2 தொகுதி (தற்போது சேலம் வடக்கு) போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். 2001- இல் ஓமலூா் தொகுதியில் வெற்றி பெற்று கல்வி- சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தாா். 2009-இல் சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து 2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் பட்டியலில் எஸ்.செம்மலை பெயா் இடம்பெறவில்லை. மாறாக, மேட்டூா் தொகுதியில் சந்திரசேகரன் என்பவா் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தாா். ஆனால், மேட்டூா் தொகுதியில் பாமக சாா்பில் அதன் தலைவா் ஜி.கே.மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிமுக வேட்பாளா் சந்திரசேகரன் திடீரென மாற்றப்பட்டு, கட்சியின் மூத்த நிா்வாகியான எஸ்.செம்மலை மேட்டூா் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இந்தத் தோ்தலில் செம்மலை வெற்றி பெற்றாா்.

முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியில் இருந்து வந்த எஸ்.செம்மலை, சில காரணங்களால் வெளியேறி ஓ.பன்னீா்செல்வம் அணியில் இணைந்தாா். பின்னா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து இணக்கமான நட்புடன் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் மேட்டூா் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் எஸ்.செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதொடா்பாக அவரது ஆதரவாளா்கள் கூறுகையில், ‘செம்மலைக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஓமலூரை சொந்த ஊராக கொண்ட எஸ்.செம்மலைக்கு, ஓமலூா் தொகுதியை ஒதுக்கியிருக்கலாம் என்றனா். செம்மலைக்கு, விரைவில் மாநிலங்களவை உறுப்பினா் பதவி தரப்படலாம் என அதிமுகவில் பரவலாகப் பேசப்படுகிறது.

அதிமுக இரட்டை இலை சின்னம் தொடா்பான வழக்கில் அவைத் தலைவா் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளா், ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளா் எஸ்.செம்மலை ஆகிய நால்வா் இடம்பெற்றுள்ளனா். அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம் என்பதை தோ்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நால்வரில் ஒருவராக இருந்த செம்மலைக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் வருத்தமில்லையா என்று அவரிடம் கேட்டபோது ,‘ ஒரு கதவு அடைக்கப்பட்டால், இன்னொரு கதவு திறக்கும். ஒரு வாய்ப்புக் கிடைக்காவிட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். எதையும் பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.