நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விதியை மீறி அதிக பாரமேற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், சாலை போக்குவரத்து விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.

News image
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, சாலையில் உரசும் அளவிற்கு நெகிழிக் குழாய்கள் ஏற்றிச் செல்லும் தனியார் நெகிழி தொழிற்சாலை வாகனம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், சாலை போக்குவரத்து விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. விபத்து ஏற்படுவதைத் தடுக்க, விதிகளை மீறும் சரக்கு வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறையினர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால், பேருந்து, வேன் உள்ளிட்ட பெரும்பாலான பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், லாரி, டெம்போ, டேங்கர், டிரெய்லர் உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட சிறு ரக போக்குவரத்து வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சாலையில் செல்வது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், பயணிகள் போக்குவரத்து வாகனங்களைக் கண்காணித்து, சோதனை செய்யும் காவல்துறையினரும், போக்குவரத்து துறை மோட்டார் வாகன அலுவலர்களும், லாரி உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்களைக் கண்காணித்து சோதனை செய்யும் பணிகளைத் தவிர்த்து வருகின்றனர். இதனால்,  பெரும்பாலான கனரக சரக்கு போக்குவரத்து வாகனங்கள், சாலை விதியை மீறி,  அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. 

Story image

குறிப்பாக, வாழப்பாடியில் இயங்கும் பழைய இரும்பு கடைகள், மற்றும் மன்னாயக்கன்பட்டியில் இயங்கும் பழைய நெகிழிப் பொருட்களை உருக்கி, குடம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும், பழைய இரும்பு  கழிவுகள் மற்றும் பழைய நெகிழி பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு திறந்தவெளியாகச் செல்வது தினம்தோறும் வாடிக்கையாகிவிட்டது.

சாலையை அடைத்துக்கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களினால் வாழப்பாடியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்களில் செல்வோர் மீது, குப்பைகள் படர்ந்து மாசு ஏற்படுகிறது. இந்த லாரிகளில் இருந்து சாலையில் உதிர்ந்து விழும் பழைய பொருள்களால் விபத்துகளும் ஏற்படுகின்றன. 

இந்த கனரக சரக்கு வாகனங்களை காவல்துறையும்,  போக்குவரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட  பழைய பொருள்களை சேகரித்து உருக்கும் தொழிற்சாலை லாரிகளில் இரண்டு லாரிகளில் ஏற்ற வேண்டிய பொருள்களை ஒரே லாரியில் அடைத்து, லாரியைவிட அகலமாகவும், அதிக உயரத்திற்கும், இரும்பு மற்றும் நெகிழி கழிவுப் பொருள்களை, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஏற்றிச் செல்கின்றன. இதனால், மற்ற வாகன ஓட்டுனர்களும், பயணிகளும் பொதுமக்களும், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, விதிமுறைகளை மீறி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட கனரக சரக்கு போக்குவரத்து வாகனங்களைக்  கட்டுப்படுத்த, காவல்துறையினர் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களிடையே  கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.