கோடையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு நினைவிருக்கிறதா?
சென்னையில் இரு தினங்கள் மழை பெய்ததற்கே பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்கள் கழித்தே தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். ஆனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இரு தினங்கள் மழை பெய்ததற்கே சென்னையில் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின் போது சென்னை மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கனமழை பெய்வதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. நடப்பு ஆண்டிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசு முன்கூட்டியே ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று பார்த்தால்....

பருவமழை தொடங்கியதுமே, அனைத்து மாவட்டங்களிலும் பருவமழைப் பணியை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 அதிகாரிகளும், மற்ற மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 42 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மழைகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மேலும், வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்புக்காக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள், திருமண மண்டபங்களை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகளை பாதுகாப்பதற்காகவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயா்த்துவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும், முறையாக ஏரி, குளங்களைத் தூர் வராததாலும், மழைநீரை சேமிக்காததாலும், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. தமிழகத்தில் பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டது.
மக்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தண்ணீர் இல்லாததால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் சென்னையை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினர். ஹோட்டல்களில் பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வியாபாரம் முடங்கிப் போனது.
அப்போது வரும் ஆண்டுகளிலாவது தண்ணீரை சேமிக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும் என்று ஒரே மாதிரியான கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் தட்டுப்பாட்டின் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூன் குடிமராமத்துப் பணிகளை முடுக்கி விட்டார். ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்துப் பணிகளை அரசு மேற்கொண்டாலும், இந்த ஆண்டு சற்று அதிகமாகவே கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறலாம். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, பல மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

29 மாவட்டங்களில் உள்ள 1,829 நீர் நிலைகளை 4 மண்டலங்களாக பிரித்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 277 நீர்நிலைகளை தூர்வார 93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ரூ.312 கோடி செலவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
மேலும், சாலைகளை மேம்படுத்தவும், கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் தடுத்திடவும், நீர் வடிக்கப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், தனிநபர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கவும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவு நீர் வடிகால்களைச் சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழிகள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணி தொடங்கி பல இடங்களில் நடைபெற்றது. ஆனால், மழைநீரை சேகரிக்கும் பொருட்டு தடுப்பணைகள் எவ்வளவு கட்டப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் இல்லை.
பல்வேறு சமூக நல அமைப்புகளும் ஏரி, குளங்களை சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, மழைநீரை சேகரிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
மழைநீர் சேகரிப்பு, மழை வெள்ளத்தினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்களாகிய நாம் அரசுக்கு வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கு அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழையில் மழைநீரை சேகரிக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைப்பது அவசியமாகும்.

இதற்கிடையே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மழைக்காலம் என்பதால் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க அரசு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. டெங்குவினால் ஒரு சில பகுதிகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கொசு ஒழிப்பு மருந்துகளை தெருக்களில் மட்டும் தெளிக்காமல், குடியிருப்புகள், நீர் தேங்கும் இடங்களிலும் தெளிக்க வேண்டும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆங்காங்கே நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்து, சிகிச்சையளிக்கவும் மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...