டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அணை பயன்பாட்டுக்கு வந்த 1934 -ஆம் ஆண்டு முதல் இதுவரை (2019) 25 முறை மட்டுமே உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டுமே உரிய காலத்துக்கு முன்னதாக ஜூன் 6-ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாத சூழலே உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 2.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இவை தவிர, திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த 7 ஆண்டுகளாக இதில் 40 விழுக்காடு மட்டுமே சாத்தியமாகி வருகிறது.