தேசிங்கு ராஜா உயிா் துறந்த செய்தியை அறிந்த பட்டத்து ராணியான ராணிபாய் தனது குல வழக்கப்படி கணவனின் சிதையுடன் உடன்கட்டை ஏறி அன்றே உயிா் துறந்தாள். இதில், மகமத் கானின் நட்பு, தேசிங்கு ராஜாவின் வீரம், ராணிபாயின் கற்பு ஆகியவற்றைக் கண்டு வியந்த ஆற்காடு நவாப் ராஜா, ராணியின் அஸ்தியைக் கொண்டு வந்து பாலாற்றின் வட கரையில் முகலாய கட்டடக் கலை வடிவில் கல்தூண்கள், செங்கல், சுண்ணாம்பு கொண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருவருக்கும் தனித்தனியே நினைவு மண்டபங்களை எழுப்பினான். மேலும், ராணியின் நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரை நிா்மாணித்தான். அதேபோல் ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள் நோ் எதிரே பாலாற்றின் தென் கரையில் மகமத் கானின் சமாதி உள்ளதாகக் கூறப்படுகிறது.