ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மீனவர்களுக்கு மானிய விலையில் கிடைக்குமா பிஎஸ்என்எல் சாட்டிலைட் போன்?

தமிழகத்தில் மீனவர்கள் வசதிக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் செயற்கைக்கோள் தொலைபேசியை (சாட்டிலைட் போன்)

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:53 pm

தி. இன்பராஜ்



தமிழகத்தில் மீனவர்கள் வசதிக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் செயற்கைக்கோள் தொலைபேசியை (சாட்டிலைட் போன்) அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் ரூ. 1 லட்சம் விலையுள்ள இந்த போனை மானிய விலையில் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தொலைத்தொடர்புக்காக வயர்லஸ் கருவிகளையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தொலைவுக்குமேல் சென்றாலோ, பேரிடர் காலங்களிலோ இந்தக் கருவிகளை பயன்படுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது.
இந்நிலையில், மீனவர்கள் பயன்படுத்தும் வகையில், அவர்கள் வசதிக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது செயற்கைகோள் தொலைபேசியை (சாட்டிலைட் போன்) அறிமுகப்படுத்தியுள்ளது. 318 கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள் தொலைபேசியில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நம்பத்தகுந்த இணைப்பு, உயர்தரத்தில் குரல் கேட்கும் வசதி, சிறந்த வடிவமைப்பு, பேரிடர் காலங்களில் உதவும் வகையில் அதிவிரைவு தொடர்பு வசதி, தொடர்ந்து 8 மணி நேரம் பேசும் வகையிலும் 100 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலும் பேட்டரி வசதி என பல்வேறு வசதிகள் உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய கடல் பகுதிக்குள் செல்லும்போது உள்ளூர் அழைப்புக் கட்டணம், வெளிநாட்டு கடல் பகுதிகளுக்குள் செல்லும்போது ரோமிங் அழைப்புக் கட்டணம் என 2 வகை கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. 
அதன்படி உள்ளூர் அழைப்புக்கு நிமிடத்துக்கு ரூ. 60, ரோமிங் அழைப்புக்கு நிமிடத்துக்கு ரூ. 250, உள்ளூர் குறுஞ்செய்திக்கு ரூ. 60, ரோமிங் குறுஞ்செய்திக்கு ரூ. 265 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பேசுவதற்கு இருப்பது போன்று தங்களுக்கு வரும் அழைப்புக்கும் நிமிடத்துக்கு ரூ. 60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் தொலைபேசியின் விலை ரூ. 82,600 என்றும், ஆண்டுக்கு ரூ. 14 ஆயிரம், மாதாந்திர உரிமக் கட்டணம் ரூ. 250, முன்பதிவு கட்டணம் என ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியை வாங்குவதற்கு ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நவீன வசதிகள் இருந்தாலும் செல்லிடப்பேசியின் விலை மற்றும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், தொலைத்தொடர்பு தொலைவு 100 கடல் மைல் தொலைவுக்குள் என இருப்பதும் தங்களுக்கு பெரிய அளவில் பலன் தராது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாட்டிலைட் போனில் உள்ள வசதிகள் குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட துணைப் பொது மேலாளர் எஸ். இளங்கோவன் கூறியது: அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த நவீன சாட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 
செயற்கைக்கோள் உதவியுடன் இந்த தொலைபேசி செயல்படுவதால் மீனவர்களுக்கு பேரிடர் காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக கரையில் உள்ள தொலைபேசிக்கு பிரச்னைக்குரிய மீனவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குறுஞ்செய்தியாக சென்றுவிடும். பேரிடர்களில் சிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க இந்த நவீன வசதி உதவும். செயற்கைகோள் வசதி என்பதால் கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. 
ஒவ்வொரு அழைப்புக்கும் செயற்கைக்கோள் நிறுவனத்துக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் தலைமை நிர்வாகத்துக்கு கட்டணக் குறைப்பு தொடர்பாக தகவல் தெரிவித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் சேவியர் வாஸ் கூறியது: 
மீனவர்கள் தற்போது பயன்படுத்திவரும் வயர்லஸ் கருவிகள் மூலம் 15 கடல் மைல் தொலைவு மட்டுமே சரியாக தொடர்பு கொள்ள முடியும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கைக்கோள் போன் மூலம் சாதாரண செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ள முடியும் என்பது மீனவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இருப்பினும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், உயர் அதிகாரிகளிடமும் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், செயற்கைக்கோள் போனின் விலை அதிகமாக இருப்பதால் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து மீனவ சங்கங்களும் இணைந்து மீன்வளத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். மானிய விலையில் வழங்கினால், தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்ட மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.