ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாஜக எதிர்ப்பா; விளம்பர வெளிச்ச மோகமா?

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வீடு திரும்பியுள்ள,

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:42 pm

தி. இன்பராஜ்

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வீடு திரும்பியுள்ள, கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவி சோபியாவின் பின்புலம் ஆராயப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்ற கோரிக்கை, அவரின் நடவடிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஏ.ஏ. சாமி-மனோகரி தம்பதியின் மகள் சோபியா. இவர், கனடா நாட்டில் தற்போது இயற்பியல் மற்றும் கணிதம் தொடர்பான ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவரது சகோதரர் கிங்ஸ்டன். மருத்துவராக உள்ளார்.
மாணவி சோபியா தனது பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியிலும், கல்லூரி படிப்பை தில்லியிலும், முதுநிலை படிப்பை ஜெர்மனியிலும், மற்றொரு முதுநிலை படிப்பை கனடாவிலும் படித்துள்ள நிலையில், தற்போது கனடாவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். 
கனடாவில் இருந்து கடந்த 3 ஆம் தேதி சென்னை திரும்பிய சோபியாவை அவரது தந்தை ஏ.ஏ. சாமி, தாய் மனோகரி ஆகியோர் விமானத்தில் தூத்துக்குடிக்கு அழைந்து வந்தனர். அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுடன் மாணவி சோபியா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
தமிழிசையின் இருக்கைக்கு அருகேயுள்ள இருக்கையில் சோபியாவின் குடும்பத்தினர் அமர்ந்திருந்த நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் வரை பாஜகவை பற்றியும், மத்திய அரசின் ஆட்சி குறித்தும் தொடர்ந்து சோபியா விமர்சனம் செய்து வந்தாராம். ஒரு கட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக பாஜக அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. 
பயணத்துக்கு முன்பாக தனது முகநூல் மற்றும் சுட்டுரையில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு நண்பர்களின் கருத்துகளை கேட்டுள்ளார்.
விமானத்திலும், விமான நிலையத்திலும் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். ஆனால், சோபியா தரப்பில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சோபியாவின் தந்தை ஏ. அந்தோணிசாமி என்ற ஏ.ஏ. சாமி கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அனைத்து போராட்டங்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்து வந்தவர் என்பதும் தற்போதைய மத்திய உளவுத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் நடைபெற்ற பொது விசாரணை அறிக்கை தாக்கல் நிகழ்வில் ஏ.ஏ. சாமி கலந்து கொண்டுள்ளார். அவரது ஊக்கத்தின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டு கட்டுரைகளை தி வயர்' என்ற ஆன்லைன் பத்திரிகையில் மாணவி சோபியா எழுதியுள்ளார். 
ஏப்ரல் 4 ஆம் தேதி எழுதிய கட்டுரையில், ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்கள் என்ற நோக்கத்திலும், ஜூன் 3 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை கண்துடைப்பு என்ற நோக்கத்திலும் எழுதியுள்ளார்.
கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கோணத்தில் தற்போது காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் யாருடனெல்லாம் மாணவி சோபியா தொடர்பு கொண்டார்? எத்தனை முறை தொடர்பு கொண்டார்? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் படித்து வரும் மாணவி சோபியா, இந்தியாவில் அதற்கான கல்வி ஊக்கத் தொகையை எந்த அடிப்படையில் பெற்று வருகிறார்? அதற்கான ஆவணங்களை அவர் முறைப்படி தாக்கல் செய்துள்ளாரா? என்ற கோணங்களிலும் விசாரணையை தொடங்கியுள்ளனர் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள்.
மாணவி சோபியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டபோது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என போலீஸார் கேட்டுள்ளனர். அப்போது, மாணவி சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை அவரது தந்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது தொடர்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
அந்த பாஸ்போர்ட்டில் உள்ள தகவலின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே, பணப் பரிமாற்றம், மாணவி சோபியா பங்கேற்ற கருத்தரங்குகள், கனடா மற்றும் ஜெர்மனியில் இருந்த போது எந்தெந்த அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார்? அதல் ஏதேனும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளதா? என்ற கோணங்களில் மாணவி சோபியாவின் பின்புலம் முழுவதையும் ஆராயப்பட வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலி என கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக காணப்பட்ட தூத்துக்குடியில் ஓரளவு அமைதி திரும்பி வந்த நிலையில், மாணவி சோபியாவின் நடவடிக்கையால் மீண்டும் உலகம் முழுவதும் பார்வையை தன் பக்கம் இழுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மீது தனக்கு உள்ள வெறுப்பின் காரணமாக மாணவி சோபியா அவ்வாறு நடந்து கொண்டாரா? அல்லது பாஜகவின் மாநிலத் தலைவருடன் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் தனக்கு மற்றவர்களின் பார்வை கிடைக்கும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு மாணவி சோபியாவின் விளக்கம் மூலமே பதில் கிடைக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.