பானி பூரி செய்யும் வட மாநிலத்தவர்களின் வாழ்க்கை ருசிக்கிறதா?
சென்னையில் அதிகப்படியான வடமாநிலத்தவர்களின் வரத்தால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனதுடன், குற்றங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டுகள்.


சென்னை: சென்னையில் அதிகப்படியான வடமாநிலத்தவர்களின் வரத்தால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனதுடன், குற்றங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டுகள்.
அடிக்கடி பானி பூரி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வலைத்தளங்களில் வளைய வந்தாலும், சிலரால் தங்களது நாக்குகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நேராக அதுபோன்ற கடைகளுக்குச் சென்று தான் நிற்கிறார்கள்.
வட மாநிலத்தவரின் வரத்தால் நமக்கு பானி பூரி, பேல் பூரி எல்லாம் கிடைத்தாலும், நம்ம ஊர் திண்பண்டங்களின் மவுசு குறைந்து போனது மற்றொரு வருத்தம்.
அதிக நேரம் வேலை செய்தல், சொன்ன வேலையை செய்தல், வார இறுதி நாளில் விடுப்பு எடுக்காமை போன்ற பல காரணங்களால் வட மாநில மக்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பு அளித்தனர். அது நாளடைவில் அனைத்துத் துறைகளிலும் பரவி தற்போது தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதிப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இவ்வளவுக்குப் பின்னும், வந்தாரை வாழ வைக்கும் சென்னையைப் பற்றியும், தங்களது வாழ்க்கை பற்றியும் வட மாநில மக்கள் சொல்வது என்னவென்று கேட்டால், அலகாபாத்தைச் சேர்ந்த மகேந்தர் குப்தா (26) பேல் பூரி செய்து கொண்டே நம்மிடம் பேசுகிறார்.
சென்னையில் வியாபாரம் செய்வது சிறப்பாக இருப்பதாக இங்கிருக்கும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். இந்த மிகப்பெரிய நகரத்தில் செலவழிக்க எல்லோரிடமும் நிறையப் பணம் இருக்கிறது. அது பள்ளிச் சிறார்களோ, வயதானவர்களோ எல்லோரிடமும் பணம் இருக்கிறது. எங்கள் கிராமம் போல இல்லை. இதுபோல செலவழிக்க எங்கள் மக்களிடம் பணம் இருப்பதில்லை. ஒருவர் உழைத்து சம்பாதித்து 6 பேர் வரை சாப்பிடும் நிலைதான் அங்கு உள்ளது என்கிறார்.
தனது கடைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.500 கொடுப்பதால், தினந்தோறும் கடையை திறப்பதாகவும், வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை எடுப்பதில்லை என்றும், பானி பூரி செய்வதிலேயே எங்கள் முழு நேரமும் செலவிடுவதாகவும், முதலில் தனியாக வேலை செய்து வந்த தான், தற்போது தனது கிராமத்தில் இருந்து 18 வயது அஜய் குமாரை உதவிக்கு அழைத்து வந்திருப்பதால், மற்ற வேலைகளை அவர் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.
பெசன்ட் நகரில் உள்ள சீன உணவகத்தில் பணியாற்றும் சில பெண்கள், நேபாளத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சென்னையில் இருப்பவர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள். வீடுகளை வீட்டு இங்கு வந்திருப்பது கவலையை தந்தாலும், நாங்கள் ஒரு குழுவாக இருப்பதால் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
இதுபோன்று பல தரப்பட்ட வட மாநில மக்களும் சென்னையை நம்பி வந்துள்ளனர். வெயிட்டராக வேலைக்கு வந்த தான் தற்போது மேனேஜராக பணியாற்றுவதாகக் கூறும் அட்ரியன் லாம்பெர்ட், எனது மனைவி நேபாளத்தில் இருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற நான் இங்கே வேலை செய்கிறேன் என்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சுனில் குமார் கூறுகையில், குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் இருப்பது கஷ்டமாக உள்ளது. என் குழந்தைகள் வளர்வதைக் கூட நான் பார்க்க முடியவில்லை. என்ன செய்வது. யாராவது ஒருவர் சம்பாதித்துத்தானே ஆக வேண்டும். வீட்டுக்குப் போக வேண்டிய நாட்களை எண்ணிக் கொண்டே இருப்பேன். சில நாட்களில் 12 மணி நேரம் கூட பணியாற்றுவேன். நேரம் கிடைக்கும் போது குடும்பத்துடன் பேசுவேன் என்கிறார்.
எதுவாக இருந்தாலும், சென்னையின் கடும் வெயிலைத் தவிர, அவர்களுக்கு சென்னை சொர்கபுரியாகவே திகழ்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற ஊரை விட்டு உறவுகளை விட்டு சென்னைக்கு வந்து மொழி தெரியாமல், உணவு கிடைக்காமல் அல்லாடும் பல வட மாநில மக்களுக்கு இடையே ஒரு சில காளான்கள் செய்யும் நச்சு வேலையால் அனைத்து வட மாநில மக்களுமே சந்தேகப் பார்வைக்கு ஆளாகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...