கட்டுமானத் தொழிலை மீட்டெடுக்க செயற்கை மணல் குவாரிகள்: அரசு கவனம் செலுத்துமா?
தமிழகத்தில் இப்போதுள்ள சூழலில் கட்டுமானத்தொழிலை மீட்டெடுக்கவும், இத் தொழிலை சார்ந்தும், மறைமுகமாகவும் உள்ள கோடிக்கணக்கான


தமிழகத்தில் இப்போதுள்ள சூழலில் கட்டுமானத்தொழிலை மீட்டெடுக்கவும், இத் தொழிலை சார்ந்தும், மறைமுகமாகவும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்றவும் செயற்கை மணல் குவாரிகளை அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசுக் குவாரிகளுக்கு நீதிமன்றத் தடை, ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கடும் நெருக்கடியில் கட்டுமானத்துறை உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளது.
மாற்று மணல் எது?: ஆற்று மணலுக்கு இப்போது உள்ள ஒரே மாற்று எம்-சான்ட் எனப்படும் (manufactured sand) செயற்கை மணலே. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 6 மாதத்தில் மணல் குவாரிகளை மூடிவிட்டால் தமிழகத்தின் ஒரே தீர்வாக இருப்பது இந்த மாற்று மணல் மட்டுமே. கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் இந்த மணல், எம் சாண்ட் என அழைக்கப்பட்டாலும் சிஎஸ்-சான்ட் (crushed stone sand)என்ற பெயரில் தான் அரசால் அனுமதிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
பூச்சுக்கு உகந்ததா?: மாற்று மணல் குறித்து முன்வைக்கப்படும் ஒரே புகார் பூச்சுக்கு உகந்ததாக இல்லை என்பதே. கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ஐ.எஸ்.383 கொண்டதுதான் எம்-சான்ட் மணல். மேலும், இந்த மணலில் பாதிக்கு மேல் பருமணல் இருப்பதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், தரமும் வலிமையும் கூடுதலாகவே கிடைக்கும். ஜல்லி தயாரிக்கும்போது கிடைக்கும் கிரஷர் தூசுகளை பூச்சுக்குப் பயன்படுத்த முடியும். செயற்கை மணலில் பூச்சு வேலைக்கென்றே சிறப்பு பூச்சு மணல் சந்தையில் கிடைக்கிறது. அதுவும் கிடைக்கவில்லை என்றாலும் செயற்கை மணலை சல்லடையில் சலித்துப் பயன்படுத்தலாம் என்கின்றனர் மாற்று மணல் உற்பத்தியாளர்கள்.
குவாரிகளின் இப்போதைய நிலை: தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, மதுரை, சேலம், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷர் ஆலைகள் உள்ளன. இவற்றில், மாற்று மணல் குவாரியை தொடங்க ஒரு கிரஷர் ஆலைக்கு ரூ.1 கோடி முதல் 5 கோடி வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர், சிறுமுகை, பெரிய குயிலி, செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, உடுமலை ஆகிய இடங்களில் செயற்கை மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இவைதவிர, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில குவாரிகள் இயங்கி வருகின்றன. அரசின் உரிய அங்கீகாரம் பெற்று அதிகபட்சம் 15 குவாரிகள் மட்டுமே இயங்கும் என்கின்றனர் மணல் லாரி உரிமையாளர்கள்.
கிடு, கிடு விலை உயர்வு: ஆற்று மணல் தட்டுப்பாடின்றி கிடைத்தபோது மாற்று மணல் ஒரு யூனிட் அதிகபட்சம் ரூ. ஆயிரத்தைத் தாண்டவில்லை. ஆனால், மணலுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளதால் இப்போது ஒரு யூனிட் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தின் கட்டுமானத் தேவைக்கு நாளொன்றுக்கு 45 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. ஆனால், இப்போது 10 ஆயிரம் யூனிட் கிடைப்பதே அபூர்வமாகிவிட்டது.
எம்-சான்ட் உற்பத்தியாளர்கள் கூறுவதென்ன?: செயற்கை மணலானது ஆற்றுமணலைவிட தரமானது. எம்-சான்ட் பயன்படுத்தும் கான்கிரீட் பணியின்போது தண்ணீருடன் சூப்பர்பிளாஸ்டிசைசர் கலவை கலந்து பயன்படுத்தும்போது ஆற்று மணல் கான்கிரீட்டை விட உறுதியாக இருக்கும். மத்திய தரைக்கடல் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் செயற்கை மணலைப் பயன்படுத்தி உறுதியான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான கட்டடமான துபையின் புர்ஜ் கலிஃபாவும் மாற்று மணலில் கட்டப்பட்டதுதான் என்கின்றனர் எம்-சான்ட் உற்பத்தியாளர்கள். எனவே, தமிழக மணல் தேவையை பூர்த்திசெய்ய வேண்டுமெனில் மாநிலத்தில் உள்ள அனைத்து ஜல்லி கிரஷர் ஆலைகளிலும் எம்-சான்ட் யூனிட் தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும். மானியம், கடனுதவி வழங்க வேண்டும். கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்கின்றனர்.
அரசு செய்ய வேண்டியது என்ன?: மாற்று மணல் குவாரி திறக்க பொதுப்பணித் துறையிடம் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள சூழலில், அந்தத் துறையை தனது வசம்வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் என்கின்றனர் கட்டுமானத் துறையினர்.
ஜல்லி கிரஷர் ஆலைகளில் வெளியேற்றப்படும் தரமற்ற கிரஷர் பவுடரை எம்-சான்ட் என விற்பதைத் தடை செய்ய வேண்டும். மாவட்டம் வாரியாக உள்ள அங்கீகாரம் பெற்ற எம்-சான்ட் குவாரிகள் பட்டியலை அரசிதழில் வெளியிட வேண்டும். மாற்று மணலுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். ஆற்று மணலைப் போன்று மாற்று மணலையும் இணையதள வழி பதிவு செய்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். மாவட்டந்தோறும் எம்-சான்ட் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தி தரச்சான்று பெற்ற பிறகே விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்பதே கட்டுமானத் துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி கூறியது:
உயர் நீதிமன்றத் தடை, மணல் தட்டுப்பாடு ஆகியவற்றால் ஆற்று மணல் விண்ணைமுட்டும் அளவுக்கு (யூனிட் ரூ.22 ஆயிரம் வரை) விலை உயர்ந்துவிட்டது. கேட்பாரற்றுக் கிடந்த செயற்கை மணலும் இப்போது ரூ. 5 ஆயிரம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், 1 லட்சம் லாரி உரிமையாளர்கள், 2 லட்சம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பல லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதையும், கட்டுமானத்துறை நெருக்கடியில் சிக்கியுள்ளதையும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதற்கு தீர்வு காண அரசே செயற்கை மணல் குவாரிகளைத் தொடங்க வேண்டும். இல்லையெனில், தனியார் குவாரிகளை ஊக்குவித்து அவற்றை முழுமையாக அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கச் செய்ய வேண்டும். உற்பத்தியாகும் மாற்று மணலை வேலையிழந்துள்ள மணல் லாரிகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு இணையதள பதிவை நடைமுறைப்படுத்தலாம். மேலும், மோட்டார் வாகனச்சட்டப்படி 6 சக்கரம் கொண்ட லாரிகளில் 2 யூனிட், 10 சக்கரம் கொண்ட லாரிகளில் 3 யூனிட் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும். மணல் விலையும் கட்டுக்குள் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...