கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு சான்றிதழ்களை வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்துவிதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இ-அடங்கலை கணினியில் பதிவேற்றம் செய்வதை புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து, இணைய இணைப்பு இல்லாத பயனற்ற மடிக்கணினி மற்றும் சிம்கார்டுகளை ஒப்படைத்தல், சிறு விடுப்பு எடுத்தல், கூடுதல் பொறுப்பு கிராம கணக்குகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தல், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த 10ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 வகையான சான்றிதழ்கள்: இதுதொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் குமார் கூறியதாவது: கடந்த 10ஆம் தேதி முதல் முழு அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைக்கு அனைத்தும் ஆன்லைன்மயமாகிவிட்டன. சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், விதவை சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்பட 26 வகையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களே வழங்கி வருகிறார்கள். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் இணைய வசதியில்லை. ஒருசில இடங்களில் மடிக்கணினி, சிம்கார்டு போன்றவற்றை வழங்கினாலும், இணைய வசதி செய்து தரப்படாததால் எந்தப் பயனும் இல்லை. அதன் காரணமாக அவற்றை திரும்ப ஒப்படைத்துவிட்டோம்.
சொந்த செலவில்... கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இணைய வசதி, ஸ்கேனர், பிரிண்டர் போன்ற வசதிகள் இல்லாததால் ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் பணிகளை இணையதள மையங்களுக்கு (பிரெளசிங் சென்டர்) சென்று எங்கள் சொந்தச் செலவிலேயே செய்து வருகிறோம். ஒரு சான்றிதழுக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.20 வரை செலவாகிறது.
தமிழகம் முழுவதும் ஏராளமான பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதேபோல் வங்கிக் கடன், விவசாயக் கடன் போன்றவற்றிற்கு இ-அடங்கல் வழங்கி வருகிறோம். வழக்கமாக ஒரே நாளில் முடிக்க வேண்டிய இந்தப் பணி, இப்போது 20 நாள்கள் வரை ஆகிறது. மேலும் இ-அடங்கல் பணியை மேற்கொள்வதிலேயே ஒரு நாள் முழுவதும் வீணாகிவிடுகிறது. பட்டா மாறுதல் இனங்களான முழுப்புலம், உட்பிரிவு, நகராட்சி பட்டா மாறுதல் அனைத்திற்கும் நில அளவைப் பயிற்சி முடித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கோப்புகளை தயார் செய்து வழங்க அனுமதிக்க வேண்டும். ஏனெனில் ஏதாவது நீதிமன்ற வழக்கு இருந்தால், அது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
எங்களுடைய கோரிக்கை தொடர்பாக இதுவரை பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார்.
முடங்கிய பணிகள்: கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி முடங்கியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
பணிகளில் பாதிப்பில்லை
இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தைப் பொருத்தவரையில் ஒரு சங்கத்தினர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதுதவிர இ-சேவை மையங்களில் சான்றிதழ் கோருபவர்களின் விண்ணப்பம் வழக்கமாக கிராம நிர்வாக அலுவலருக்குச் சென்று, பின்னர் வருவாய் ஆய்வாளர்களுக்குச் செல்லும். ஆனால் இப்போது போராட்டம் காரணமாக கிராம நிர்வாக அலுவலருக்குச் செல்லாமல் நேரடியாக வருவாய் ஆய்வாளருக்கு விண்ணப்பம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சான்றிதழ் வழங்கும் பணியில் பெரிய பாதிப்பு இல்லை. தற்போது சான்றிதழ் சீசன் இல்லை. மேலும், அவசரத் தேவைகளுக்கு கைப்பட எழுதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ் வழங்கும் பணி பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
வருவாய் ஆய்வாளர்கள் மறுப்பு
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில மைய முடிவின்படி கிராம நிர்வாக அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்ட கிராம கணக்குகளை உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களால் பெறவோ, பராமரிக்கவோ முடியாது. மேலும், சான்றிதழ்கள் ஒப்புதல் அளித்தல், பட்டா மாறுதல், மனுக்களின் ஒப்புதல் அளித்தல் ஆகியவை தொழில்நுட்பம் சார்ந்த பணிகள். இவற்றில் கிராம நிர்வாக அலுவலர்களின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி உள்வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் செய்வதென்பது தொழில்நுட்பரீதியான பிரச்னையை உருவாக்கக் கூடியதாகும். எனவே, எங்களுடைய சங்கத்தைச் சேர்ந்த உள்வட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் இப்பணியை மேற்கொள்ளமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


